/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்வெட்டை கண்டித்து சாலை மறியல் மணவாளநகரில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
/
மின்வெட்டை கண்டித்து சாலை மறியல் மணவாளநகரில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மின்வெட்டை கண்டித்து சாலை மறியல் மணவாளநகரில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மின்வெட்டை கண்டித்து சாலை மறியல் மணவாளநகரில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 21, 2024 01:35 AM

திருவள்ளூர், :திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட 43 ஊராட்சிகளுக்கும் கடம்பத்துார், பேரம்பாக்கம், பாப்பரம்பாக்கம், மணவாளநகர், மண்ணுார் ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் பல இடங்களில் அறிவிப்பில்லாமல் மின்தடை செய்யப்படுவதால் பகுதிவாசிகள் குடிநீருக்கு கூட அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கடம்பத்துார் ஒன்றியத்தில் சிற்றம்பாக்கம், காரணி, வெங்கத்துார் , அதிகத்துார், மேல்நல்லாத்துார் உட்பட பல ஊராட்சிகளில் அறிவிப்பில்லாமல் மின்வெட்டு செய்யப்படுகிறது.
இதனால் அப்பகுதிவாசிகள் அன்றாட பணிகளை கூட மேற்கொள்ள முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மின்தடை குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நேற்று முன்தினம் பேரம்பாக்கத்தில் சிற்றம்பாக்கம் பகுதிவாசிகள் மின்வெட்டைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த மப்பேடு காவல் ஆய்வாளர் ரவிகுமார் மற்றும் கடம்பத்துார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாகராஜ் ஆகியோர் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர்.
நேற்று திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் மேல்நல்லாத்துார் பகுதியில் மின்வெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் மணவாளநகர் பகுதியில் அதிகத்துார் பகுதிவாசிகள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன், மணவாள நகர் காவல் ஆய்வாளர் ரவிகுமார் மற்றும் மின்வாரிய உதவி பொறியாளர் தட்சிணாமூர்த்தி, இளநிலை பொறியாளர் யுவராஜ் மற்றும் அதிகாரிகள் சமாதானப் பேச்சு நடத்தியதையடுத்து அப்பகுதிவாசிகள் கலைந்து சென்றனர்.
இதனால் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் மற்றும் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். .
எனவே, தமிழக அரசு மின்வெட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.