/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி
/
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : பிப் 24, 2025 02:05 AM

திருத்தணி:தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு அடுத்த மாதம், 3ம் தேதி துவங்கி, ஏப்.15ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வருவாய் கோட்டத்தில் அரசு பள்ளிகளில் அரசு பொதுத் தேர்வில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க கல்வித்துறை ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளது.
அந்த வகையில், திருத்தணி, திருவலங்காடு, ஆர்.கே., பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய நான்கு ஒன்றியங்களில் உள்ள 57 அரசினர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் என, கலெக்டர் பிரதாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில் நேற்று, திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 294 மாணவ - மாணவியருக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு, 10 ஆசிரியர்கள் வாயிலாக கற்பித்தல் பயிற்சி நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற திருத்தணி அமிர்தபுரம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.வெங்கடேசன் பேசியதாவது:
அரையாண்டு, திருப்புதல் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், மெல்ல கற்கும் மாணவர்கள் கண்டறியப்பட்டு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் வாயிலாக பாடவாரியாக கற்பிக்க சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன.
கடந்தாண்டுகளில் அரசு பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் பயிற்சி கையேடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இது மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். இந்த வினாக்களை மட்டுமே படித்தால் குறைந்தபட்சம் 80 மதிப்பெண்கள் எளிதாக பெறமுடியும். தேர்வில் தோல்வி அடைவது அதிகளவில் தவிர்க்கப்படும்.
சிறப்பு பயிற்சி வகுப்பில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடுகள் வழங்கப்படுகின்றன. கையேடுகள் படித்தால் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதோடு அதிக மதிப்பெண்களும் பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.