/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டூ - வீலர்கள் திருட்டால் பயணியர் அச்சம் கூடுதல் வாகன நிறுத்துமிடம் அமையுமா?
/
டூ - வீலர்கள் திருட்டால் பயணியர் அச்சம் கூடுதல் வாகன நிறுத்துமிடம் அமையுமா?
டூ - வீலர்கள் திருட்டால் பயணியர் அச்சம் கூடுதல் வாகன நிறுத்துமிடம் அமையுமா?
டூ - வீலர்கள் திருட்டால் பயணியர் அச்சம் கூடுதல் வாகன நிறுத்துமிடம் அமையுமா?
ADDED : செப் 12, 2024 02:29 AM

பொன்னேரி:சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், பொன்னேரி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் கல்வி, சுகாதாரம், தொழில், வியாபாரம் உள்ளிட்டவைகளுக்காக சென்னை, கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பொன்னேரியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து, ரயில் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரும் பயணியர், அவர்களது வாகனங்களை, அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துகின்றனர்.
இங்கு, இருசக்கர வாகனங்களுக்கு, 250 ரூபாயும், சைக்கிளுக்கு, 150 ரூபாயும் மாத கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. போதிய இடவசதி இல்லாததாலும், கட்டணத்தை தவிர்க்கவும், ரயில் நிலையத்தில் இருந்து வேண்பாக்கம் செல்லும் சாலையோரங்களில் வரிசையாக நிறுத்துகின்றனர்.
ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியிலும் நிறுத்தப்படுவதால், பயணியர் ரயில் நிலையத்திற்குள் சென்று வரும்போது, மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், வெளிவளாகங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களில், 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு, பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், பயணியர் அச்சத்தில் உள்ளனர்.
வாகனங்களை பாதுகாக்க லாக் செய்துவிட்டு, கூடுதலாக முன்பகுதி சக்கரத்தில் இரும்பு சங்கிலியால் பூட்டு போடுகின்றனர்.
தற்போது, வேண்பாக்கம் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படும் நிலையில், அதே பகுதியில், அங்குள்ள சுற்றுச்சுவரை ஒட்டி கூரை அமைத்து, கூடுதலாக வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ரயில் நிலைய சாலை மற்றும் வாகன நிறுத்தும் இடங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.