/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் வரை மெட்ரோ ரயில் சேவை பிரசாரத்தில் உதயநிதி வாக்குறுதி
/
மீஞ்சூர் வரை மெட்ரோ ரயில் சேவை பிரசாரத்தில் உதயநிதி வாக்குறுதி
மீஞ்சூர் வரை மெட்ரோ ரயில் சேவை பிரசாரத்தில் உதயநிதி வாக்குறுதி
மீஞ்சூர் வரை மெட்ரோ ரயில் சேவை பிரசாரத்தில் உதயநிதி வாக்குறுதி
ADDED : மார் 29, 2024 11:52 PM

பொன்னேரி:திருவள்ளூர் தனித்தொகுதியில், பொன்னேரி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அவர் பேசியதாவது:
கடந்த, 2019ல், திருவள்ளூர் தொகுதியில், 3.50 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வென்றோம். கடந்த தேர்தலின்போது, எதிரிகள் ஒன்றாக சேர்ந்து வந்தனர்.
இம்முறை தனித்தனியாக பிரிந்து வருகின்றனர். குறைந்தது, 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றிபெற வேண்டும்.
தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் சசிகாந்த் செந்திலை வெற்றிபெற செய்தால், மாதம் இரண்டு நாள் திருவள்ளூர் தொகுதியில் தங்கி, இப்பகுதிக்கு தேவையானவற்றை செய்து தருவேன் என வாக்குறுதி அளிக்கிறேன்.
பொன்னேரி அரசு மருத்துவமனை, அனைத்து வசதிகளுடன் முதல்தர மருத்துவமனையாக மாற்றப்படும். அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி விரிவுபடுத்தப்படும். குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
மாதவரம் அல்லது விம்கோ நகரில் இருந்து மீஞ்சூர் வரை, மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும். திருவள்ளூர் தொகுதியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இளைஞர் மற்றும் பெண்களுக்கு, 50 சதவீத வேலைவாய்ப்பு உறுதி செய்து தரப்படும். மீனவர் நலன்காக்க தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்கப்படும்.
இயற்கை சீற்ற நேரங்களில் ஆழ்கடலில் மீனவர்கள் மாயமாவதைத் தடுக்க, தடையற்ற தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தி தரப்படும். இந்த வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்படும்.
ஆவடியில் நீதிமன்றம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கோயம்பேடு முதல் ஆவடி வரை அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்ட பணிகள், திருநின்றவூர் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆவடி ரயில் நிலையத்தில், அனைத்து முக்கிய ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆவடியில் பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா என்ற விரிவாக்க கிளையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், ஒவ்வொரு மழையின்போது, முட்டிக்கால் அளவுக்கு மழைநீர் தேங்கும். தி.மு.க., ஆட்சி அமைந்த பின் 37 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு 63 செ.மீ., மழை பெய்த போதும், இங்கு ஒரு சொட்டு மழைநீர் கூட நிற்கவில்லை.
கடந்த 2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி மகளிருக்கு இலவச பேருந்து வசதி வாயிலாக, 460 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.
புதுமைப்பெண் திட்டத்தில் மூன்று லட்சம் மாணவியர் பயன் அடைந்து உள்ளனர். காலை உணவுத் திட்டத்தில் தினமும், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை 1.16 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் சிலருக்கு வரவில்லை என்ற குறைபாடுகள் உள்ளன. தேர்தலுக்குப் பின், விண்ணப்பித்த 1.60 கோடி பேரும் இத்திட்டத்தில் முழுமையாக பயன் அடைவர்.
இவ்வாறு அவர் பேசினார்.

