/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நடவுப்பணிக்கு உள்ளூர் பணியாட்கள் கிடைக்காமல்... பரிதவிப்பு!: வடமாநில தொழிலாளர்களை நம்பியுள்ள விவசாயிகள்
/
நடவுப்பணிக்கு உள்ளூர் பணியாட்கள் கிடைக்காமல்... பரிதவிப்பு!: வடமாநில தொழிலாளர்களை நம்பியுள்ள விவசாயிகள்
நடவுப்பணிக்கு உள்ளூர் பணியாட்கள் கிடைக்காமல்... பரிதவிப்பு!: வடமாநில தொழிலாளர்களை நம்பியுள்ள விவசாயிகள்
நடவுப்பணிக்கு உள்ளூர் பணியாட்கள் கிடைக்காமல்... பரிதவிப்பு!: வடமாநில தொழிலாளர்களை நம்பியுள்ள விவசாயிகள்
UPDATED : ஜூன் 05, 2025 05:38 AM
ADDED : ஜூன் 04, 2025 10:20 PM

பொன்னேரி:சொர்ணவாரி பருவத்திற்கு நெற்பயிரிடும் விவசாயிகள், நடவுப்பணிகளுக்கு உள்ளூரில் ஆட்கள் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், வடமாநில தொழிலாளர்களை கொண்டு, அப்பணிகளை மேற்கொண்டு உள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் இல்லையெனில், விவசாயம் கேள்விக்குறி தான் என, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா, சொர்ணவாரி, நவரை பருவங்களில், ஆண்டுக்கு 2.50 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது.
இதில், அதிகப்படியாக பொன்னேரி தாலுகாவிற்கு உட்பட்ட சோழவரம் மற்றும் மீஞ்சூர் ஒன்றியங்களில், ஆண்டிற்கு, 75,000 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெறுகிறது.
உழவு, நடவு, களை பறிப்பு என, தொடர்ந்து விவசாய பணிகள் நடைபெறும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய பணிகளுக்கு உள்ளூரில் பணியாட்கள் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
உழவு மற்றும் அறுவடை பணிகளுக்கு பெரும்பாலும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், பிரச்னை இல்லை. அதேசமயம், நடவு மற்றும் களைப் பணிகளுக்கு, கட்டாயம் பணியாட்கள் தேவை என்பதால், விவசாயிகள் அவர்களை தேடி அலையும் நிலை தொடர்கிறது.
அதிக பணிச்சுமை இல்லாத 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்வதையே உள்ளூர் தொழிலாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். தற்போது, சொர்ணவாரி பருவத்திற்கு விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன.
உள்ளூரில் ஆட்கள் கிடைக்காமல் நடவுப்பணிகளுக்காக ஆந்திரா, மேற்குவங்கம், ஒடிசா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து, விவசாய தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளனர். பொன்னேரியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் அவர்கள் முகாமிட்டு உள்ளனர்.
நாற்று பறிப்பது, அவற்றை விவசாய நிலத்திற்கு கொண்டு செல்வது, நேர்த்தியாக நடவு செய்வது என, விவசாய பணிகளை மேற்கொள்கின்றனர். 20 பேர் கொண்ட குழு, ஏக்கருக்கு 4,200 - 4,600 ரூபாய் வரை கூலி பெறுகிறது.
ஒரு நாளைக்கு, 4 - 5 ஏக்கர் நடவு செய்யப்படுகிறது. மேற்கண்ட மாநிலங்களில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் நடவுப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திரா மற்றும் வடமாநில விவசாய தொழிலாளர்கள் இல்லையென்றால், இங்கு விவசாயம் செய்வதே கடினம் என, விவசாயிகள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
விவசாயத்திற்கு நடவு, களை, மருந்து தெளிக்க என, அனைத்து பணிகளுக்குமே தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. ஒவ்வொரு பருவத்திற்கும் வெளிமாநில தொழிலாளர்களின் வருகைக்காக காத்திருக்க வேண்டி உள்ளது.
ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் அவர்களால் பணிகளை மேற்கொள்ள முடியாது. இதனால், உரிய நேரத்தில் விவசாய பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறோம்.
அதேசமயம் ஆந்திரா, மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வரவில்லை என்றால், இங்கு விவசாயம் கேள்விக்குறி தான். 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
குறைந்தபட்சம் களை, நடவு பணிகளை மேற்கொள்ளும் நேரத்திலாவது, அந்தந்த கிராமங்களின் நிலைக்கு ஏற்ப 100 நாள் பணிகளை நிறுத்தி, அப்பணியாளர்களை விவசாய தொழிலுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.