/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிப்காட் பகுதியில் ரயில் நிலையம் கிடப்பில் தரம் உயர்த்தும் பணி
/
சிப்காட் பகுதியில் ரயில் நிலையம் கிடப்பில் தரம் உயர்த்தும் பணி
சிப்காட் பகுதியில் ரயில் நிலையம் கிடப்பில் தரம் உயர்த்தும் பணி
சிப்காட் பகுதியில் ரயில் நிலையம் கிடப்பில் தரம் உயர்த்தும் பணி
ADDED : ஆக 25, 2024 01:49 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் பணிகளுக்காக, ஆறு மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்பு நிலங்களை கையப்படுத்திய நிலையில், இது வரை பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மத்திய ரயில்வே துறையின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்தல் மற்றும் நவீனமயமாக்கும் பணிகளுக்காக, முதல் கட்டமாக, 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த, 2023ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது.
நான்கு பார்க்கிங் வளாகங்கள், சிப்காட் மற்றும் பஜார் பகுதியில் இரு பிரமாண்ட நுழைவாயில் கட்டடங்கள், எஸ்கலேட்டர்கள், வணிக வளாகம், கணினி முன்பதிவு மையம், ரயில் பயணியர் ஓய்வு அறை, ஒப்பனை அறை என ஏராளமான வசதிகளுடன் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ரயில் நிலையத்தின் இரு புறத்திலும், ரயில்வே துறைக்கு சொந்தமான 2.26 ஏக்கர் நிலங்களை சிலர் ஆக்கிரமித்து வீடு, கடை, கோவில்கள் நிறுவி இருந்தனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மேற்கண்ட ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் ரயில் நிலைய கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆனால் சிப்காட் பகுதியில் ஆக்கிரமிப்பு நிலங்கள் கையகப்படுத்தி ஆறு மாதங்கள் கடந்தும் எந்த ஒரு கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாக ரயில் பயணியர் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் தாமதிக்காமல் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் அறிவித்தபடி ரயில் நிலையம் தரம் உயர்த்தும் பணிகளை விரைந்து மேற்கொண்டு முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

