/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏரி ஆக்கிரமிப்பை அகற்றாமல் துார்வாரி என்ன பயன்? பருவ மழையின்போது வெள்ள பாதிப்பு அபாயம்
/
ஏரி ஆக்கிரமிப்பை அகற்றாமல் துார்வாரி என்ன பயன்? பருவ மழையின்போது வெள்ள பாதிப்பு அபாயம்
ஏரி ஆக்கிரமிப்பை அகற்றாமல் துார்வாரி என்ன பயன்? பருவ மழையின்போது வெள்ள பாதிப்பு அபாயம்
ஏரி ஆக்கிரமிப்பை அகற்றாமல் துார்வாரி என்ன பயன்? பருவ மழையின்போது வெள்ள பாதிப்பு அபாயம்
ADDED : மே 23, 2024 11:49 PM

மாதவரம், மாதவரம் ரெட்டேரி நீரை, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏரி துார் வாரும் பணிகள், கடந்தாண்டு செப்டம்பரில் துவங்கின. ஏரியில் 0.32 டி.எம்.சி., நீர் இருப்பு வைக்க முடியும்.
வட கிழக்கு பருவ மழைக்கு முன், பணியை முடிக்க, இந்தாண்டு பிப்ரவரி முதல் முழு வீச்சில் பணிகள் நடக்கின்றன.
அதேபோல, ரெட்டேரி உபரிநீர் பாயும், தணிகாசலம் நகர் வடிகாலை, பகிங்ஹாம் கால்வாயுடன் இணைக்கும் பணி, 91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கிறது. அதில், 1,800 மீ., நீள கான்கிரீட் வடிகால், 2,500 மீ., நீள திறந்தவெளி கால்வாய் கரைகளை உறுதிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாகி நீலக்கண்ணன் கூறியதாவது:
ரெட்டேரி 1908ம் வருவாய்த்துறை குறிப்பில், 772 ஏக்கராக இருந்துள்ளது. அதன்பின் நகர்ப்புற மேம்பாடு காரணமாக, 700 ஏக்கராக சுருங்கியது. தற்போது, தேசிய நெடுஞ்சாலையின் ஒருபுறம் 260 ஏக்கர், மறுபுறம் 60 ஏக்கர் என, 320 ஏக்கர் மட்டுமே ஏரியாக இருப்பதாக, நீர்வள ஆதாரத்துறையின் பதிவேட்டில் உள்ளது.
மீதமுள்ள, 300 ஏக்கருக்கும் அதிகமான ஏரிப்பகுதி கொளத்துார் லட்சுமிபுரம் சந்திப்பு முதல் புழல் எம்.ஜி.ஆர்.நகர் வரை, ஆக்கிரமிப் பாளர்களிடம் சிக்கி, குடியிருப்புகளாக மாறியது. அவற்றை மீட்க, தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்கிரமிப்புகள் குறித்த மக்களின் புகார் மற்றும் செய்திகளை, நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை.
இந்த நிலையில், 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏரி துார் வாரியும், வடிகால் அமைத்தும் எந்த பயனும் இல்லை.
அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, ஏரியில் சேமிக்க வேண்டிய நீரை, எதற்காக வடிகால் அமைத்து, கடலுக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், வடிகால் அனைத்தும் கழிவுநீர் பாய்வதற்கு தான் பயன்படுகிறது.
அதனால், அதி கனமழை பெய்தால், வழக்கம் போல் வெள்ள பாதிப்பு ஏற்படும். அதிகாரிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு, அரசு நிதியை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.