/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விடுபட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் எப்போது?
/
விடுபட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் எப்போது?
ADDED : மே 04, 2024 09:44 PM
பொன்னேரி,:பொன்னேரி நகராட்சியில், முதல்கட்டமாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளில், 95 சதவீதம் முடிவடைந்த நிலையில், விடுபட்ட பகுதிகளுக்கான இரண்டாம் கட்ட பணிகள் துவங்காததால், குடியிருப்புவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
பொன்னேரி நகராட்சியில், 27 வார்டுகளில், 69 கி.மீ., 237 தெருக்கள் உள்ளன. 2011ல்பாதாள சாக்கடை திட்டத்திற்கு, 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
சுத்திகரிப்பு நிலையம், சேமிப்பு தொட்டி ஆகியவை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. தேர்வு செய்யப்படும் இடங்களில் எதிர்ப்புகள் எழுந்ததால், மாற்று இடங்களை தேடி அலைந்தனர்.
நீண்ட இழுபறிக்கு பின் அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்குள் திட்டமதிப்பீடு அதிகரித்தால், நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
அதையடுத்து, 2019 ல் முதல்கட்டமாக, 54.78 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, நகராட்சிக்கு உட்பட்ட, 1 - 5 வரையிலான வார்டுகளில் உள்ள, 40 தெருக்களை தவிர்த்து, மீதம் உள்ள 22வார்டுகளில், 41 கி.மீ., தொலைவிற்கான பணிகள் துவங்கப்பட்டன.
தெருக்களில் பள்ளங்கள் தோண்டி, அதில் இரும்பு மற்றும் சிமென்ட் உருளைகள், 'மேன் ேஹால்கள்' ஆகியவை பொருத்தும் பணிகள் நடைபெற்ன.
வேண்பாக்கம், பழைய பேருந்து நிலையம், கள்ளுக்கடைமேடு, பஞ்செட்டி சாலை ஆகிய இடங்களில் சேமிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டன. பெரியகாவணம் பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது கழிவுநீர் செல்வதற்கான குழாய்கள் பதிக்கும் பணிகளில், 95 சதவீதம் முடிந்து உள்ளன. சுத்திகரிப்பு நிலையத்தில், இயந்திரங்கள், தளவாடங்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டத்தில், விடுபட்ட பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட நிதி பெற்று, பணிகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை அதற்கான எந்தபணிகளும் நடைபெறாததால், குடியிருப்புவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
சின்னகாவணம், பெரியகாவணம், குண்ணம்மஞ்சேரி, பழவேற்காடு சாலை, பெரும்பேடு சாலை உள்ளிட்ட பகுதிகளில், 45 தெருக்கள் திட்டப்பணிகளுக்காக காத்திருக்கின்றன.
மேற்கண்ட பகுதிகளில், குடியிருப்புகளின் கழிவுநீர் சாலைகளிலும், நீர்நிலைகளிலும் விடப்படுகிறது. விடுபட்ட பகுதிகளிலும், உடனடியாக பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
நகராட்சி கமிஷனர் எஸ்.கோபிநாத் கூறியதாவது:
பாதாள சாக்கடை திட்டப்பணிகளில், 95 சதவீதம் முடிந்து உள்ளன. அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைத்தும் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும். விடுப்பட்ட பகுதிகள் மற்றும் புதியதாக உருவாகி வரும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்கள், குடியிருப்புகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.