/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊராட்சி அலுவலகத்தில் 'சிசிடிவி' பொருத்தப்படுமா?
/
ஊராட்சி அலுவலகத்தில் 'சிசிடிவி' பொருத்தப்படுமா?
ADDED : மார் 02, 2025 11:48 PM
திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, கடம்பத்துார் உட்பட 14 ஒன்றியங்களின் கீழ் 526 ஊராட்சிகள் உள்ளன.
ஊராட்சிக்கு ஒரு செயலர் நியமிக்கப்பட்டு குடிநீர் வழங்குதல், தெருவிளக்கு பராமரித்தல், சாலை பராமரிப்பு, மத்திய - மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துதல், வரி வசூல் போன்ற பணிகளை மேற்கொள்ள, ஊராட்சி தலைவருக்கு உதவியாக செயல்பட்டு வருகிறார்.
தற்போது, ஊராட்சி தலைவர் பதவிக்காலம் முடிந்த நிலையில், ஊராட்சி செயலர்களே முழு பணிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், பல ஊராட்சிகளிலும் வரிப்பணம் செலுத்த வருவோர், ஊராட்சி சம்பந்தமான புகார்களை தெரிவிக்க வரும் போது, ஊராட்சி செயலர்கள் அலுவலகத்தில் இருப்பதில்லை.
ஊராட்சி அலுவலகம் பூட்டியே கிடக்கின்றன. அதேபோல், ஊராட்சி செயலர்கள் குறித்த நேரத்திற்கு வருவதில்லை போன்ற புகார்களையும், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் எதிர்க்கொள்கின்றனர்.
எனவே, ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க, ஒவ்வொரு ஊராட்சி அலுவலகத்திலும் 'சிசிடிவி' கேமரா பொருத்த திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கூறியதாவது:
ஊராட்சி சம்பந்தமான புகார் வரும் இடங்களில் சம்பந்தப்பட்ட பி.டி.ஓ.,க்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பர். இதுவரை அப்படியான தகவல்கள் இல்லை.
'சிசிடிவி' கேமரா பொருத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆலோசித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.