ADDED : பிப் 21, 2025 10:27 PM
பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு சொந்தமாக பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் வளாகத்தில், 54 கடைகள் கொண்ட, ஐந்து வணிக வளாகங்கள் உள்ளன. இவற்றின் வாடகை வாயிலாக ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாய் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.
தற்போது நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில், பழைய மற்றும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், 23 கடைகள் கொண்ட இரண்டு வணிக வளாகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், ஆறாவது மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ், 1.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் விடப்பட்டது. வணிக வளாகத்திற்கான கட்டுமான பணிகள் நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது.
நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் தலைமையில் நடந்த பூமி பூஜையில், நகராட்சி கமிஷனர் எஸ்.கே.புஷ்ரா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.