/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.10 கோடியில் மேல்நிலை தொட்டிகளுக்கு...டெண்டர்!:49 ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
/
ரூ.10 கோடியில் மேல்நிலை தொட்டிகளுக்கு...டெண்டர்!:49 ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
ரூ.10 கோடியில் மேல்நிலை தொட்டிகளுக்கு...டெண்டர்!:49 ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
ரூ.10 கோடியில் மேல்நிலை தொட்டிகளுக்கு...டெண்டர்!:49 ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
ADDED : ஆக 07, 2024 02:36 AM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில், ஊராட்சிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை தீர்ப்பதற்கு, முதற்கட்டமாக, 12 ஒன்றியங்களில் உள்ள 49 ஊராட்சிகளில் 10.38 கோடி ரூபாயில், 49 புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை தீர்ப்பதற்கு, ஒன்றிய நிர்வாகம் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டி மற்றும் கைபம்புகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் பெரும்பாலான ஊராட்சிகளில் மழைக்காலத்தில் மட்டும் குடிநீர் பிரச்னை இருப்பதில்லை. வெயில் காலத்தில் கிராமங்களில் குடிநீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது.
பல ஊராட்சிகளில் குடிநீர் வசதி கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல், ஒன்றிய நிர்வாக அலுவலகம், ஊராட்சி நிர்வாக அலுவலகம் ஆகிய இடங்களில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை தீர்க்க, மாவட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
முதற்கட்டமாக, 12 ஒன்றியங்களில், 49 ஊராட்சிகளில், 10 ஆயிரம், 30 ஆயிரம், 60 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்படவுள்ளது.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நபார்டு வங்கி மூலம், கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, 2024--- 25ம் ஆண்டு திட்டத்தின் கீழ் 10.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு கடந்த வாரம் டெண்டர் விடப்பட்டுள்ளது.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ள கிராமங்களை கணக்கெடுத்து, முதற்கட்டமாக 12 ஒன்றியத்தில், 49 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்படவுள்ளன.
இதற்காக 10.38 கோடி ரூபாயில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன. இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் புதிய குடிநீர் தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.