/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு '10 ஆண்டு'
/
கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு '10 ஆண்டு'
ADDED : பிப் 26, 2024 06:46 AM
சென்னை: சென்னை, அம்பத்துார் அடுத்த சூரப்பட்டு டோல்கேட் அருகே, 2022 ஆக., 26ல், சந்தேகத்துக்கு இடமான முறையில் ஒடிசா பதிவெண் கொண்ட வெள்ளை நிற ''ொயோட்டா எட்டியோஸ்' கார் நிற்பதாக, அம்பத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் கார் அருகே சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென காரில் இருந்த தப்பியோட முயன்ற இரண்டு பேரை, மடக்கி பிடித்தனர். காரில் சோதனை செய்தனர்.
இதில், 5 கிலோ எடையிலான மூன்று பார்சல்கள், ஆறு கிலோ ஒரு பார்சல் என, மொத்தம் நான்கு பார்சல்களில் இருந்த 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், 'அவர்கள், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் மகாபத்ரா, நரசிங்கராவ் ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இவர்கள், ஒடிசா மாநிலத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வந்து, சென்னையில் வட மாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்றுவந்தனர்.
ஏற்கனவே இரண்டு முறை, இதுபோல கடத்தி வந்து சென்னையில் விற்றுள்ளனர்' என, தெரியவந்தது.
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன் விசாரணைக்கு வந்தது.
போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.சீனிவாசன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'சுரேஷ் மகாபத்ரா, நரசிங்கராவ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
எனவே, அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது' என தீர்ப்பளித்தார்.

