/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி ஏரியில் இருந்து 1,000 கன அடி வெளியேற்றம்
/
பூண்டி ஏரியில் இருந்து 1,000 கன அடி வெளியேற்றம்
ADDED : ஜன 08, 2024 11:34 PM
ஊத்துக்கோட்டை,: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கம் வடகிழக்கு பருவமழையால் நிரம்பி காணப்பட்டது. சில தினங்களாக பெய்த தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு, 50 கன அடி நீர் திறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், வினாடிக்கு, 1,000 கன அடி நீர் வந்தது. இதன் காரணமாக நேற்று காலை, 12 மற்றும், 3 ஆகிய மதகுகள் வாயிலாக வினாடிக்கு, 1,000 கன அடிநீர் திறக்கப்பட்டது. நீர்த்தேக்கத்தில் தற்போது 3.64 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 34.75 அடி.
இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நீர்வரத்தை பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும். இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நிலையால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது' என்றார்.
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3.645 டி.எம்.சி., உயரம் 24 அடி. இரு தினங்களாக ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முன்தினம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி நீர் திறக்கப்பட்டு நேற்று மாலை வரை வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில், கனமழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று பகல் 12:00 மணி நிலவரப்படி ஏரிக்கு வினாடிக்கு 1,400 கன அடி நீர் வரத்து இருந்தது.
இதனால் கொள்ளளவு 3.159 டி.எம்.சி.,யும், நீர்மட்ட உயரம் 22.15 அடியாகவும் இருந்தது.