/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் அரசு பள்ளிகள் மேம்பாட்டிற்கு...ரூ.10.82 கோடி!:பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க கலெக்டர் உத்தரவு
/
திருவள்ளூரில் அரசு பள்ளிகள் மேம்பாட்டிற்கு...ரூ.10.82 கோடி!:பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க கலெக்டர் உத்தரவு
திருவள்ளூரில் அரசு பள்ளிகள் மேம்பாட்டிற்கு...ரூ.10.82 கோடி!:பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க கலெக்டர் உத்தரவு
திருவள்ளூரில் அரசு பள்ளிகள் மேம்பாட்டிற்கு...ரூ.10.82 கோடி!:பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 26, 2024 01:40 AM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் பழுதடைந்த அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை சீரமைக்கவும், புதிய பள்ளி கட்டடம் மற்றும் வகுப்பறைகள் கட்டுவதற்கு, 10.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். இப்பணிகள் ஆறு மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் மொத்தம், 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 984 தொடக்க பள்ளிகள், 257 நடுநிலைப் பள்ளிகள், 130 உயர்நிலை பள்ளிகள், 119 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 1,490 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன.
பெரும்பாலான பள்ளிகளின் வகுப்பறை கட்டடங்கள், கழிப்பறை மற்றும் சமையல் கூடங்கள் பழுதாகி உள்ளன. இதனால், மாணவர்கள் தினமும் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
மேலும், மழை பெய்யும் போது பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் கல்வி கற்பதில் கடும் சிரமப்படுகின்றனர்.
இதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம், பழுதடைந்த பள்ளிகள் குறித்து கணக்கெடுக்குமாறு, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளருக்கு அறிவுறுத்தியது.
அதன்படி, 14 ஒன்றியங்களிலும், மிகவும் பழுதடைந்த வகுப்பறை கட்டடங்கள், கழிப்பறைகள் மற்றும் சமையல் கூடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு, ஒன்றிய நிர்வாகம் அனுப்பியது.
முதற்கட்டமாக மாவட்ட நிர்வாகம், ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை சீரமைக்க, நடப்பாண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பழுது நீக்கம், புனரமைத்தல் மற்றும் சமையல் கூடங்கள் பழுது பார்த்தல் போன்ற பணிகள், 120 பள்ளிகளில் 342 பணிகள் மேற்கொள்ள தீர்மானித்தது.
இதற்கு பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 57 பள்ளிகளும், பொது நிதியில் இருந்து, 63 பள்ளிகள் என, 5.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.
இப்பணிகள் அடுத்த மாதத்தில் துவங்கி, ஆறு மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல், குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024 - 25ம் ஆண்டின் கீழ், புதிய பள்ளி கட்டடம், வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு, 14 ஒன்றியத்தில், 15 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
இதில், ஒரு பள்ளி நகராட்சிக்குட்பட்டதால், மீதமுள்ள 14 பள்ளிகளில், புதிதாக 31 வகுப்பறைகள் கட்டுவதற்கு, 5.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டுள்ளன. இந்த பணிகளும், ஆறு மாதத்திற்குள் முடிக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கூறியதாவது:
மாவட்டத்தில், மொத்தம் 134 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பழுதுபார்ப்பு, புரனமைத்தல் பணிகள், 10.82 கோடி ரூபாயில் நடைபெற உள்ளன.
இப்பணிகளுக்கு, வரும் 30ம் தேதிக்குள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, 'டெண்டர்' விடவேண்டும். மேலும், பணிகளுக்கான ஆணையும் உடனடியாக சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும்.
மேலும், பராமரிப்பு பணிகளையும், புதிய கட்டட பணிகளையும் ஒன்றிய பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.