/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
4 ஆண்டில் 11,000 விதை பரிசோதனை 730 விதைகள் தரமற்றதாக அறிவிப்பு
/
4 ஆண்டில் 11,000 விதை பரிசோதனை 730 விதைகள் தரமற்றதாக அறிவிப்பு
4 ஆண்டில் 11,000 விதை பரிசோதனை 730 விதைகள் தரமற்றதாக அறிவிப்பு
4 ஆண்டில் 11,000 விதை பரிசோதனை 730 விதைகள் தரமற்றதாக அறிவிப்பு
ADDED : மே 16, 2025 10:11 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட விதை பரிசோதனை மையத்தில், நான்கு ஆண்டுகளில் 11,000 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 730 விதைகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டது.
திருவள்ளுர் மாவட்ட விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் சுகுணா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் விதை மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறை கட்டுப்பாட்டில், திருவள்ளுர் மாவட்ட விதைப் பரிசோதனை நிலையம், பெரியகுப்பத்தில் உள்ள ஜே.என்.சாலையில் செயல்பட்டு வருகிறது.
அங்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வக உபகரணங்களை கொண்டு விதைகளின் தரம் துல்லியமாக பரிசோதித்து, தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
நெல், உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை, எள், காய்கறி மற்றும் கீரை உள்ளிட்ட அனைத்து வகையான விதைகளும் பரிசோதனை செய்யப்படுகிறது. விதையின் தரத்தை நிர்ணயிக்கக்கூடிய காரணிகளான முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் பிறரக கலப்பு ஆகியவை பரிசோதிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.
இந்த சான்று விதைகளை முன்னுரிமை அடிப்படையில் பகுப்பாய்வு செய்து, முடிவுகளை உடனுக்குடன் வழங்கிய பின், சான்று பெற்ற விதைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் பயன்படுத்துவதால், விதையின் தேவை குறைவதுடன், உற்பத்திக்கான செலவு குறைக்கப்பட்டு கூடுதல் விளைச்சல் கிடைக்கிறது.
திருவள்ளுர் மாவட்ட விதை பரிசோதனை நிலையத்திற்கு, நான்கு ஆண்டுகளில் 11,000 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 730 விதை மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, தரமற்ற விதைகள் விவசாயிகளுக்கு கிடைப்பதை தடுப்பதில் விதை பரிசோதனை நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.