/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
114 இடங்களில் மழைநீர் சேமிப்பு தொட்டிகளாக மாற்றம் ...உருமாறும் போர்வெல்:நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்த ஒன்றிய நிர்வாகம் முயற்சி
/
114 இடங்களில் மழைநீர் சேமிப்பு தொட்டிகளாக மாற்றம் ...உருமாறும் போர்வெல்:நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்த ஒன்றிய நிர்வாகம் முயற்சி
114 இடங்களில் மழைநீர் சேமிப்பு தொட்டிகளாக மாற்றம் ...உருமாறும் போர்வெல்:நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்த ஒன்றிய நிர்வாகம் முயற்சி
114 இடங்களில் மழைநீர் சேமிப்பு தொட்டிகளாக மாற்றம் ...உருமாறும் போர்வெல்:நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்த ஒன்றிய நிர்வாகம் முயற்சி
ADDED : செப் 07, 2025 12:58 AM

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியத்தில், நிலத்தடி நீரில் உவர்ப்பு தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில், 114 செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை, மழைநீர் சேமிப்பு தொட்டிகளாக மாற்றம் செய்யப்படும் நிலையில், உரிய கண்காணிப்பு இல்லாமல், கண்துடைப்பிற்கு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில், 55 ஊராட்சிகளில், 200 கிராமங்களில் வசிக்கும் இரண்டு லட்சம் மக்களுக்கு, அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.
இதற்காக, மேற்கண்ட கிராமங்களில், 700க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. மீஞ்சூர் ஒன்றியத்தில் பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள 50 கிராமங்களை தவிர்த்து, மற்ற பகுதிகளில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது.
அங்கு, 120 - 160 அடி ஆழம் வரை போர்வெல் அமைத்து, தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. நிலத்தடி நீரின் உவர்ப்புத்தன்மை நாளுக்குள் நாள் அதிகரிக்கும் நிலையில், ஆழ்துளை மோட்டார்கள் செயலிழக்கின்றன. அவ்வாறு, 200க்கும் மேற்பட்டவை செயலிழந்து உள்ளன.
இதற்காக, புதிய இடங்களில் போர்வெல்கள் அமைக்கப்படுவதும் தொடர்கிறது. மேலும், பழவேற்காடு, திருப்பாலைவனம், போலாச்சியம்மன்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, 15 கி.மீ.,யில் மெதுார் ஏரிப்பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், அத்திப்பட்டு, வேலுார், திருவெள்ளவாயல், நந்தியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, 12 கி.மீ.,யில் உள்ள வன்னிப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களிலும், 120 ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு மீஞ்சூர் ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்களில் நிலத்தடிநீர் உவர்ப்பாக இருப்பதால், மாற்று இடங்களில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில், கிராமப்புறங்களில் செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் வாயிலாக மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, மறுபயன்பாட்டிற்கு கொண்டு வருதற்கான நடவடிக்கையில், மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 114 இடங்களில் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து, அவை மழைநீர் சேமிப்பு தொட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதற்கு 'மழைநீர் சேகரிப்பு மீள் நிரப்பும் தண்டு அமைத்தல்' என பெ யரிடப்பட்டு உள்ளது.
இதற்காக, ஒவ்வொறு தொட்டிக்கும், 57,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. செயலிழந்த ஆழ்துளை கிணற்றை சுற்றிலும், 10க்கு 10 சதுரடியில், 3 அடி ஆழத்திற்கு பள்ளம் வெட்ட வேண்டும்.
அதில், 3 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். அதன் உள்ளே, 1 அடி உயரத்திற்கு, 40 எம்.எம்., அளவு கொண்ட கருங்கற்களும், அரை அடி உயரத்திற்கு, 20 எம்.எம்., அளவு கொண்ட கருங்கற்களும் கொட்ட வேண்டும். பின், ஒன்பது அங்குல உயரத்திற்கு மணல் அல்லது எம்.சாண்ட் கொட்ட வேண்டும்.
சுற்றுச்சுவரின் நான்கு பகுதிகளிலும், தொட்டிக்குள் மழைநீர் வருவதற்கு ஏதுவாக குழாய்கள் பொருத்த வேண்டும். இதன் காரணமாக, ஆழ்துளை கிணறுகளை சுற்றிலும், மழைநீர் மண்ணில் இறங்கி, நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காக, அரசின் இந்த முயற்சியை ஒரு சில ஊராட்சிகள் மட்டுமே முறையாக பின்பற்றுகின்றன. பெரும்பாலான ஊராட்சிகளில், கண்துடைப்பிற்காக பணிகளை மேற்கொள்வதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
அரசின் இந்த முயற்சி நிச்சயம் பலனிக்கும். ஒரு சில இடங்களில் செயலிழந்த ஆழ்துளை மோட்டார்கள் புத்துயிர் பெற்றுள்ளனர். ஆனால், சில இடங்களில், செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பி, கண்துடைப்பிற்காக பணி மேற்கொள்ளப்படுகிறது.
ஆழ்துளை கிணறுகள் இல்லாத இடங்களிலும், பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு சில இடங்களில் உயரமான இடங்களில் அமைப்பதால், மழைநீர் தொட்டிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்காது.
ஒவ்வொரு தொட்டிக்கும் திட்ட மதிப்பீடு 57,000 ரூபாய். ஆனால், அது முழுமையாக செலவிடப்படுவதில்லை. தரமற்ற நிலையிலும், அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமலும் அமைக்கப்படுகின்றன.
இது, அரசின் நிதியை வீணடிப்பதுடன், நோக்கமும் பயனற்று போகிறது. ஒவ்வொரு மழைநீர் சேமிப்பு தொட்டியும் உரிய அளவீடு மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளனவா என, அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் பயனளிக்கும் திட்டமாக மாறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.