ADDED : டிச 20, 2024 10:20 PM
திருத்தணி:அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வருவதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையிலான போலீசார் தமிழக எல்லையில் அமைந்துள்ள பொன்பாடி சோதனைச் சாவடியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி நோக்கி வந்த பஸ்சில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் சோதனை செய்த போது குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது.
போலீசார் விசாரணையில் குட்கா பொருள் கடத்தி வந்த நபர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த பாலாஜி 51, கீழாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி 40, காஞ்சிபுரம் மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஷேக்தாவூத் 62 என தெரிந்தது.
இதையடுத்து மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 12 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
குட்கா கடத்தியவர் கைது
திருத்தணி:ஆந்திர மாநிலம், நகரி, புத்துார் ஆகிய பகுதிகளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், திருத்தணி நகருக்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று, திருத்தணி போலீசார், பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, திருப்பதியில் இருந்து, திருத்தணி நோக்கி வந்த தனியார் பேருந்தில், போலீசார் சோதனை செய்தனர்.
பேருந்தில், ஒரு பயணியிடம் பையில் மறைத்து வைத்திருந்த, 5 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், விசாரணையில், ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம், லட்சிரெட்டிபாளையத்தைச் சேர்ந்த சுமலிராஜ்பாபு, 45, என, தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.