/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு - காட்டுப்பள்ளி சாலை பயணம் மரணபயம் சீரமைப்பிற்கு காத்திருக்கும் 15 மீனவ கிராமங்கள்
/
பழவேற்காடு - காட்டுப்பள்ளி சாலை பயணம் மரணபயம் சீரமைப்பிற்கு காத்திருக்கும் 15 மீனவ கிராமங்கள்
பழவேற்காடு - காட்டுப்பள்ளி சாலை பயணம் மரணபயம் சீரமைப்பிற்கு காத்திருக்கும் 15 மீனவ கிராமங்கள்
பழவேற்காடு - காட்டுப்பள்ளி சாலை பயணம் மரணபயம் சீரமைப்பிற்கு காத்திருக்கும் 15 மீனவ கிராமங்கள்
ADDED : ஜூன் 02, 2025 03:43 AM

பழவேற்காடு:திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவப் பகுதியில், 35க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இதில், கடற்கரை பகுதியை ஒட்டி, லைட்அவுஸ்குப்பம், வைரவன்குப்பம், காளஞ்சி, காட்டுப்பள்ளி என, 15 மீனவ கிராமங்கள் உள்ளன.
பழவேற்காடு - காட்டுப்பள்ளி இடையே உள்ள 12 கி.மீ., தொலைவிற்கான சாலை, கிழக்கு கடற்கரை சாலை என கூறப்படுகிறது. இது காட்டுப்பள்ளி, பழவேற்காடு, லைட்அவுஸ்குப்பம், தாங்கல் பெரும்புலம் ஆகிய நான்கு ஊராட்சிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது.
மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு, பழவேற்காடு வந்து செல்ல வேண்டும். பேருந்து போக்குவரத்து வசதியில்லாத நிலையில், மீனவ கிராமத்தினர் இருசக்கர வாகனங்களையே நம்பியுள்ளனர்.
மேற்கண்ட கிழக்கு கடற்கரை சாலை, 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகவும், ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. இதில், மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் உயிரை பணயம் வைத்து, மரணபயத்துடன் பயணித்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் சாலைகள் முழுதும் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி, கூடுதல் சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்டவை வர தயங்குகின்றன. இதனால், மீனவ மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தொழிலாளர்கள் தவிப்பு
காட்டுபள்ளியில் எண்ணுார் காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம், கப்பல் கட்டும் தளம், வடசென்னை அனல் மின்நிலையங்கள், எரிவாயு முனையங்கள் என, பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இவற்றில் பழவேற்காடு, திருப்பாலைவனம் பகுதிகளைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களும், இச்சாலை வழியாகவே பயணிக்க வேண்டும். சாலை சேதமடைந்து கிடப்பதால், 12 கி.மீ., துாரத்தை கடக்க, ஒரு மணி நேரம் பயணிக்கும் நிலை உள்ளது.
இரவு நேர பயணங்களின்போது, ஜல்லிக் கற்களில் சிக்கி சிறு சிறு விபத்துக்களுக்கும் ஆளாகின்றனர். மழைக்காலங்களில் கடல் சீற்றம் அதிகரித்து, கடற்கரை மணல் சாலைகளில் வந்து குவிவதால் போக்குவரத்து பாதிக்கிறது.
இதனால் மீனவர்கள், தொழிலாளர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வரும் நிலையில், மேற்கண்ட சாலையை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கடந்த 2023ல், ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இச்சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறையின் கிராம சாலைகள் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டது. நிதி ஒதுக்கி சீரமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை பணிகள் துவங்கப்படாமல் உள்ளன. மீனவ கிராமங்கள், தொழிலாளர்கள் சிரமம் கருதி, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக, சென்னையில் இருந்து பழவேற்காடிற்கு சுற்றுலா வரும் பயணியருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பழவேற்காடு - காட்டுப்பள்ளி இடையே, 12.4 கி.மீ., தொலைவிற்கு, 17 கோடியில் சாலையை புதுப்பிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகள் துவங்கப்படும். மழைக்கு முன் பணிகளை முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நெடுஞ்சாலை துறை அதிகாரி,
திருவள்ளூர்.