பாசன வசதியின்றி பாழாகும் விவசாய நிலங்கள் 1,730 ஏக்கர்! 7 கி.மீ., கால்வாயை சீரமைக்காத நீர்வளத்துறை
பாசன வசதியின்றி பாழாகும் விவசாய நிலங்கள் 1,730 ஏக்கர்! 7 கி.மீ., கால்வாயை சீரமைக்காத நீர்வளத்துறை
UPDATED : ஆக 19, 2026 01:01 AM
ADDED : ஆக 18, 2026 07:51 PM

பொன்னேரி:ஆரணி ஆற்றில் உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து உபரிநீர் செல்லும், 7 கி.மீ., கால்வாயை பராமரிக்காமல், நீர்வளத்துறை அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதால், காட்டூர் நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், 20 கிராமங்களில், பாசன வசதியின்றி, 1,730 ஏக்கர் விவசாய நிலங்கள் பாழாகி வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது.
மழைக்காலங்களில் அணைக்கட்டு நிரம்பிவுடன், உபரிநீர் அணைக்கட்டின் இருபுறமும் உள்ள கால்வாய்கள் வழியாக பெரும்பேடு ஏரிக்கும், காட்டூர் - தத்தமஞ்சி நீர்த்தேக்கத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது.
இதில், காட்டூர் - தத்தமஞ்சி நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் செல்லும், 7 கி.மீ., தொலைவிற்கான கால்வாய், உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது. கால்வாய் முழுதும் செடிகள் வளர்ந்தும், கரைகள் சரிந்தும் இருக்கின்றன.
இதனால், அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரிநீர், முழுமையாக காட்டூர் - தத்தமஞ்சி நீர்த்தேக்கத்திற்கு சென்றடைய முடியாத சூழல் உள்ளது.
காட்டூர் - தத்தமஞ்சி நீர்த்தேக்கத்தின் மொத்த பரப்பு, 614 ஏக்கராகும். இதில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், காட்டூர், தத்தமஞ்சி, அத்தமஞ்சேரி, சோமஞ்சேரி உள்ளிட்ட 20 கிராமங்களில், 1,730 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதிக்கு பயன்படுகிறது.
கடந்த காலங்களில், இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு, 0.0053 டி.எம்.சி.,யாக இருந்தது. கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டு, கடந்த 2020 - 23ல், 62 கோடி ரூபாயில், இரு ஏரிகளின் கரைகள், 9.3 கி.மீ., தொலைவிற்கு, 5 மீ., உயரத்தில் பலப்படுத்தப்பட்டன.
இதன் மூலம், காட்டூர் - தத்தமஞ்சி நீர்த்தேக்கத்தில், 0.35 டி.எம்.சி., தண்ணீர் சேமித்து வைக்க முடியும். ஆனால், அணைக்கட்டில் இருந்து செல்லும் கால்வாய் உரிய பராமரிப்பு இன்றி கிடப்பதால், நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் சென்றடைவதில், ஒவ்வொரு ஆண்டும் சிக்கல் ஏற்படுகிறது.
இதனால், திட்டமிட்ட கொள்ளவிற்கு மேற்கண்ட நீர்த்தேக்கத்தில், தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் போகிறது. அங்கு, 0.10 - 0.15 டி.எம்.சி., அளவில் தான் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
குறைந்த அளவு தண்ணீர் சேமித்து வைக்கப்படுவதால், கோடைக்கு முன்பே நீர்த்தேக்கம் வறண்டு விடுகிறது. அதனால், 20 கிராமங்களில், 1,730 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியின்றி பாழாகி வருகின்றன.
எனவே, கால்வாயை துார் வாரி, கரைகளை பலப்படுத்தி, முட்செடிகள், குப்பை கழிவுகளை அகற்றினால், அணைக்கட்டில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், முழுமையாக நீர்த்தேக்கத்திற்கு வந்தடையும்.
ஆனால், நீர்வளத்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தாமல் மெத்தனமாக செயல்படுவதாக, விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் முன், மேற்கண்ட கால்வாயை முழுமையாக சீரமைக்க, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
