UPDATED : ஆக 18, 2026 06:03 PM
ADDED : ஆக 18, 2026 05:52 PM
கீழ்நல்லாத்துார்: கீழ்நல்லாத்துாரில், கோவிலை நிர்வாகம் செய்வது தொடர்பாக, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம், கீழ்நல்லாத்துார் பகுதியில் அமைந்துள்ளது செல்லியம்மன் கோவில். இந்த கோவிலை நிர்வாகம் செய்வதில், சங்கர், 55 மற்றும் சந்துரு, 25, ஆகிய இருவரிடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி இரவு, கோவில் வளாகத்தில் இரு தரப்பினரும், ஒருவரையொருவர் ஆபாசமாக பேசி தாக்கி கொண்டனர்.
இதுகுறித்து, ஆகஸ்ட் 17 இரவு சங்கர் கொடுத்த புகாரின்படி, சந்துரு, 21, திவாகர், 21, ஆகியோர் மீதும், சந்துரு கொடுத்த புகாரின்படி, சீனிவாசன், 40, சிவா, 40, சங்கர், 55, ஜோதிலிங்கம், 46, ஆகிய நால்வர் மீதும், மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், திவாகர், சீனிவாசன், ஜோதிலிங்கம் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமினில் விடுவித்தனர். தப்பியோடிய சந்துரு, சிவா, சங்கர் ஆகிய மூவரையும், போலீசார் தேடி வருகின்றனர்.
