/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விமரிசை காவடிகளுடன் வந்து 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
/
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விமரிசை காவடிகளுடன் வந்து 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விமரிசை காவடிகளுடன் வந்து 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விமரிசை காவடிகளுடன் வந்து 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ADDED : ஆக 17, 2025 01:58 AM

திருத்தணி:முருகன் கோவிலில் நேற்று நடந்த ஆடிக்கிருத்திகை விழாவில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா, கடந்த 14ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் ஆடிப்பரணியும், நேற்று ஆடிக்கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடந்தது.
ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்ககிரீடம், தங்கவேல், பச்சைமாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
மதியம் 11:00 மணிக்கு, திருப்பதி திருமலையில் இருந்து, கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் கோவில் தலைமை குருக்கள் ஆகியோர், 18வது முறையாக திருத்தணி முருகன் கோவிலுக்கு பட்டு வஸ்திரம் கொண்டு வந்தனர்.
பின், உற்சவர் சண்முகர், மூலவர் முருகப்பெருமான் ஆகியோருக்கு பட்டு வஸ்திரத்தை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தன.
தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, இரண்டு லட்சம் பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை வழிபட்டனர். திருத்தணி முழுதும் பல்வேறு தொண்டு நிறுவனத்தின் சார்பில் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.
ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா, திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று காவடி எடுத்து வந்தார்.
திருத்தணி கோவிலில் நேற்று நடந்த ஆடிக்கிருத்திகை விழாவில், ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, குடும்பத்துடன் வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்தார்.
பின், அமைச்சர் கூறியதாவது:
பக்தர்கள் வசதிக்காக, மலைக்கோவில் மற்றும் திருக்குளம் போன்ற இடங்களில், 60 மொபைல் கழிப்பறை, பாதுகாப்பான குடிநீர், ஐந்து நாட்களும், 24 மணி நேரமும் தரிசனம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்த ஆடிக்கிருத்திகை விழாவில், வி.ஐ.பி., தரிசனம் மற்றும் வாகனங்களுக்கான அனுமதி சீட்டை கட்டுப்படுத்தியதால், பக்தர்கள் நெரிசலின்றி மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிப்பட்டு அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம், நெடியம், கஜகிரி, பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி உள்ளிட்ட மலைக்கோவில்களில் நேற்று திரளான பக்தர்கள், காவடியுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறுவாபுரி பொன்னேரி அடுத்த சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆயிரகணக்கான பக்தர்கள் முருக பெருமானை இரண்டு மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்குடம் எடுத்து வந்தனர். ஏராளமானோர் காவடி எடுத்து வந்தனர்.