/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
/
பொன்னேரியில் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
பொன்னேரியில் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
பொன்னேரியில் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
ADDED : டிச 04, 2024 11:34 PM

பொன்னேரி, 'பெஞ்சல்' புயலின்போது பெய்த அதிகப்படியான மழையின் காரணமாக, பொன்னேரி வட்டத்தில், 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி இருப்பதால், வருவாய் இழப்பை எண்ணி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், சம்பா, சொர்ணவாரி பருவங்களில், 45,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் அதிகளவில் நெல் பயிரிடப்படும் பகுதியாக இது உள்ளது.
பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட திருப்பாலைவனம், கோளூர், காட்டூர் ஆகிய குறுவட்டங்களில் உள்ள, 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடிநீர் மட்டம் உவர்ப்பாக இருக்கும்.
இப்பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆண்டு சம்பா பருவத்திற்கு பொன்னேரி வட்டத்தில், 30,100 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது.
கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்றாங்கல் முறையில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அவ்வப்போது சீரான இடைவெளியில் மழை பெய்து வந்ததால், நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தன.
இந்நிலையில், 'பெஞ்சல்' புயல் காரணமாக, கடந்த மாதம், 29, 30ம் ஆகிய தேதிகளில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இரண்டு நாட்களில், 18 செ.மீ., மழை பொழிவால் நீர்நிலைகள் நிரம்பின.
நெல் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களிலும், மழைநீர் தேங்கியது.
தேவம்பட்டு, கங்காணிமேடு, பெரியகரும்பூர், பனப்பாக்கம், மடிமைகண்டிகை, இலுப்பாக்கம், சிருளப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், 2,000 ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி வெளியேற வழியின்றி கிடக்கின்றன.
ஒவ்வொரு கிராமத்திலும், 2 - 3 அடி உயரத்திற்கு விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால், அவை வடிவதற்கு 10 - 15 நாட்கள் ஆகும் நிலை உள்ளது.
உழவு, நடவு, மருந்தினங்கள் என ஒரு ஏக்கருக்கு, 15,000 - 18,000 ரூபாய் வரை விவசாயிகள் செலவிட்டு உள்ளனர். தற்போது நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி, அழுகி வீணாகும் நிலையை எண்ணி அவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
நீர்நிலைகளின் உபரிநீர் சீராக வெளியேறுவதற்கான கால்வாய் வசதிகள் சரிவர பராமரிக்கப்படவில்லை எனவும், அதனால்தான் மழைநீர் வடிவதற்கு தாமதம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, பொன்னேரி வட்டார விவசாயிகள் சங்க செயலர் பி.ஜி.கண்பதி கூறியதாவது:
பாசன ஏரிகளுக்கு வரும் கால்வாய்கள், உபரிநீர் வெளியேறும் பகுதியில் உள்ள கால்வாய்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. அவை துார்ந்து கிடக்கின்றன.
இதனால் விளைநிலங்களில் தேங்கும் அதிகப்படியான மழைநீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டு, அவை அழுகி வீணாகின்றன. தற்போது, 'பெஞ்சல்' புயலால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறோம்.
'மாண்டஸ்', 'மிக்ஜாம்' 'பெஞ்சல்' என மூன்று ஆண்டுகளாக தொடரும் புயல் மழையால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிறோம்.
ஆண்டுக்கு ஒரு முறை பயிர் செய்யும் நிலையில்,எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. இந்த ஆண்டும் வருவாய் இழப்பிற்கு ஆளாகி உள்ளதால், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.