/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் 230 கி.வோ., துணை மின் நிலையம்...அப்பாடா: 2,000 கிராமங்களுக்கு தடையின்றி வினியோகம்
/
திருத்தணியில் 230 கி.வோ., துணை மின் நிலையம்...அப்பாடா: 2,000 கிராமங்களுக்கு தடையின்றி வினியோகம்
திருத்தணியில் 230 கி.வோ., துணை மின் நிலையம்...அப்பாடா: 2,000 கிராமங்களுக்கு தடையின்றி வினியோகம்
திருத்தணியில் 230 கி.வோ., துணை மின் நிலையம்...அப்பாடா: 2,000 கிராமங்களுக்கு தடையின்றி வினியோகம்
ADDED : ஜன 21, 2025 09:09 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர் பகுதியில், 230 கி.வோ., துணை மின் நிலையம் அமைக்கும் பணியில், திருத்தணி மின்வாரியம் துரித வேகத்தில் ஈடுபட்டுள்ளது. தற்போது, அரசின் நிர்வாக அனுமதிக்காக காத்திருக்கின்றனர். இங்கு, துணை மின் நிலையம் அமைந்தால், ஆறு, 110 கி.வோ., துணை மின் நிலையங்களுக்கு மின் இழப்பின்றி தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய முடியும். மேலும், 2,000 கிராமங்களுக்கு சீரான மின்சாரம், கூடுதல் விவசாய மின்இணைப்புகள் வழங்குவதுடன் ரயில்வே துறைக்கும், மின்வினியோகம் செய்ய உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், அலமாதி மற்றும் பஞ்செட்டி ஆகிய பகுதியில் இருந்து, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த, மோசூர் கிராமத்தில், 400 கி.வோ., துணை மின் நிலையத்திற்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த மின்நிலையத்தில் இருந்து, அரக்கோணம், சாலை, சோளிங்கர், திருத்தணி, கே,ஜி. கண்டிகை, பூனிமாங்காடு, அத்திமாஞ்சேரிபேட்டை உட்பட, 13 ஊர்களில் உள்ள, 110 கி.வோ., துணை மின்நிலையங்களுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது.
திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள ஆறு, 110 கி.வோ. துணை மின்நிலையங்களில், 23,000 விவசாய கிணறுகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 60க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கும் மின்இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மின்வினியோகம் பற்றாக்குறையால் குறைந்த அழுத்த மின்சாரம், அடிக்கடி மின்தடை போன்ற பல்வேறு பிரச்னைகளால் மின்நுகர்வோர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, திருத்தணி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் கேட்டுக் கொண்டதின்பேரில், திருத்தணி வருவாய் துறையினர், 2017ம் ஆண்டு, திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர் கிராமத்தில், 230 கி.வோ., திறன் கொண்ட துணை மின்நிலையம் அமைப்பதற்கு எட்டு ஏக்கர் பாறை புறம்போக்கு நிலம் மின்வாரியத்திற்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து அந்த எட்டு ஏக்கர் நிலத்திற்கு செல்லும் வழிக்காக, 40 மீட்டர் நீளம், 30 அடி அகலத்திற்கு தனிநபர் ஒருவரின் இருந்து மின்வாரியம் இழப்பீடு தொகை வழங்கி நிலம் கையகப்படுத்தியது. தற்போது, துணை மின்நிலையம் அமைக்கும் பணிகளில் மின்வாரிய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அனைத்து ஆவணங்களும் அரசிடம் சமர்பித்து, அரசின் நிர்வாக அனுமதிக்காக காத்திருக்கிறது.
இது குறித்து, திருத்தணி மின்வாரிய கோட்ட உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சின்னகடம்பூரில் துணை மின்நிலையம் அமைத்தால், திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள ஆறு துணை மின்நிலையத்தில் தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய முடியும்.
மேலும், விவசாயிகளுக்கு கூடுதல் மின்இணைப்பு வழங்க முடியும். துணை மின்நிலையம் அமைப்பதற்கு, 3.70 கோடியில் நிலம் கையகப்படுத்தியும், துணை மின்நிலையம் ஏற்படுத்த தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட மதிப்பீடு தயார் செய்து, சென்னை எழிலகத்தில் இருந்து, அரசின் நிர்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளன.
அரசாணை கிடைத்ததும், ஆறு மாதத்திற்குள் துணை மின்நிலையம் அமைத்து பயன்பாட்டிற்கு விடப்படும். மேலும் இந்த துணை மின்நிலையத்தின் வாயிலாக கூடுதல் விவசாய மின்இணைப்புகள் மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கும் மின்வினியோகம் செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.