/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவோர் 4,483!: இலக்கைவிட அதிகமானோரை சேர்த்து உத்தரவு
/
கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவோர் 4,483!: இலக்கைவிட அதிகமானோரை சேர்த்து உத்தரவு
கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவோர் 4,483!: இலக்கைவிட அதிகமானோரை சேர்த்து உத்தரவு
கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவோர் 4,483!: இலக்கைவிட அதிகமானோரை சேர்த்து உத்தரவு
ADDED : அக் 01, 2024 07:34 AM

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தில், கனவு இல்லம் திட்டத்தில் தேர்வான, 4,483 பயனாளிகளுக்கு வீடு கட்டும் நிர்வாக ஆணையை கலெக்டர் வழங்கியுள்ளார். இத்திட்டத்தில், பணி ஆணை பெற்றவர்கள், வீடு கட்டும் பணியை துவக்கி உள்ளனர்.
: தமிழகம் முழுதும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்தது. வரும், 2030க்குள் “குடிசையில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை அடைவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
தீர்மானம்
இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வீடு வழங்க கோரி கலைஞர் வீடு வழங்கும் திட்டம், புதிய குடிசைகள் கணக்கெடுப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்புகளில், பதிவு செய்தோர் பயனாளிகளாக கருதப்படுவர்.
மேற்கண்ட கணக்கெடுப்பு திட்டங்களின் கீழ் ஊராட்சியின் இலக்கிற்கேற்ப தகுதியான பயனாளிகளை கிராம ஊராட்சி அளவிலான குழு இறுதி செய்யும்.
குழு உறுப்பினர்களாக ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஆகியோர் உள்ளனர்.
இந்த குழு ஒப்புதல் அளித்த பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்திட சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இறுதி செய்யப்பட்ட பயனாளி விபரத்தினை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டு, மாவட்ட கலெக்டர் வாயிலாக நிர்வாக அனுமதி வழங்கப்படும், பின் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் சம்பந்தப்பட்ட பயனாளிகள் பணி உத்தரவு வழங்கப்பட்டு பணி துவங்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 2024- - 25ல் 4,000 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆய்வு
இதன்படி, எல்லாபுரம் -374, கும்மிடிப்பூண்டி -387, கடம்பத்துார்- 656, மீஞ்சூர்- 389, பள்ளிப்பட்டு -175, பூந்தமல்லி- 293, பூண்டி -570; புழல் -21, ஆர்.கே.பேட்டை -221, சோழவரம்- 243, திருத்தணி- 270, திருவலங்காடு- 495, திருவள்ளூர் -292, வில்லிவாக்கம்- 97 ஆகிய 14 ஊராட்சி ஒன்றியத்தில், 4,483 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட, 483 அதிகமாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள், உடனடியாக வீடு கட்ட கலெக்டர் பிரபுசங்கர் நிர்வாக அனுமதி வழங்கினார். நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட வீடுகளை, கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின் அவர் கூறியதாவது:
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிக்கு 360 சதுரடியில் 300 சதுரடி கான்கிரீட் தளத்துடனும், 60 சதுரடி பயனாளியின் விருப்பப்படி சாய்தள கூரை அமைத்துக் கொள்ளலாம்.
எக்காரணம் கொண்டும் ஆஸ்பெஸ்டாஸ் அல்லது வேறு வகை இயற்கை பொருட்களால் ஆன கூரைகளை பயன்படுத்தக் கூடாது. வீடு ஒன்றுக்கு 3.10 லட்சம் ரூபாய் மானியத் தொகையாக வழங்கப்படும்.
இதை தவிர மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், மனித சக்தி நாட்கள் ஊதியமாக வீடு கட்டும் பணிக்கும் 90 நாட்களுக்கு 28,710, கழிப்பறைக்கு 10 நாட்களுக்கு 3,190 ரூபாய் வழங்கப்படும்.
மேலும் கழிப்பறை கட்டுவதற்கு 12,000 ரூபாய் மானியத் தொகை தனியாக வழங்கப்படும், ஆக மொத்தம் 3 லட்சத்து 53,900 ரூபாய் பயனாளிக்கு வழங்கப்படும்.
தரமான சிமென்ட்
இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு பயனாளி விருப்பத்திற்கேற்ப செங்கல், சாம்பல் செங்கற்கள், சிமென்ட் கற்களை கொண்டு, சிமென்ட் கான்கிரீட் துாண்கள் கொண்ட அமைப்பில் அரசினால் வழங்கப்பட்ட 4 வடிவமைப்பில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வீடுகள் கட்டிக் கொள்ளலாம்.
பயனாளிகளுக்கு வீடொன்றுக்கு 140 மூட்டைகள் தரமான சிமென்ட், 'டான்செம்' அரசு நிறுவனத்திடமிருந்து பெற்று வழங்கப்படும். மேலும் 320 கிலோ இரும்பு கம்பிகளும் வழங்கப்படும்.
இவ்வாறு கூறினார்.