/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
4வது புத்தக கண்காட்சி திருவள்ளூரில் துவக்கம்
/
4வது புத்தக கண்காட்சி திருவள்ளூரில் துவக்கம்
ADDED : மார் 08, 2025 01:44 AM

திருவள்ளூர்:திருவள்ளூரில் நான்காவது புத்தக கண்காட்சி துவக்க விழா, கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன் - திருவள்ளூர், கிருஷ்ணசாமி - பூந்தமல்லி, கோவிந்தராஜன் - கும்மிடிப்பூண்டி, சுதர்சனம் - மாதவரம், துரை சந்திரசேகர் - பொன்னேரி, ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் முன்னிலை வகித்தனர்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஸ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல துறை அமைச்சர் நாசர் புத்தக அரங்கை துவக்கி வைத்தனர்.
பின், அமைச்சர் மகேஸ் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் நான்காவது ஆண்டாக புத்தக கண்காட்சி துவங்கியுள்ளது. இக்கண்காட்சியில், துறை சார்ந்த மற்றும் பதிப்பகங்களின் 115 'ஸ்டால்' இடம்பெற்றுள்ளன.
சென்னைக்கு அடுத்தபடியாக அதிகளவு புத்தகம் விற்பனையானது, திருவள்ளுரில் மட்டுமே. இங்கு வருபவர்களை வாசிப்பு பழக்கதை ஊக்கப்படுத்தும் வகையில், 1,000க்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இக்கண்காட்சி, வரும் 17ம் தேதி வரை நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள், தினந்தோறும் புத்தக திருவிழாவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கவுரவிக்கப்படுவர். தினமும் பள்ளி கல்லுாரி மாணவ - மாணவியரின் பல்சுவை நிகழ்ச்சி, மாலை பல்வேறு பேச்சாளர்களின் சிந்தனை அரங்கம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நல துறை சார்பில் 26 பேருக்கு, 26.46 லட்சம் ரூபாய் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், உதவி கலெக்டர் - பயிற்சி, ஆயுஷ் குப்தா, திருவள்ளுர் நகர் மன்ற தலைவர் உதயமலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.