/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
யானை தந்தம் கடத்தல் திருவள்ளூரில் 5 பேர் கைது
/
யானை தந்தம் கடத்தல் திருவள்ளூரில் 5 பேர் கைது
ADDED : ஜூன் 18, 2025 02:52 AM

திருவள்ளூர்:குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடமருகே, இரண்டு யானை தந்தம் பதுக்கி வைத்திருந்த ஐந்து பேரை, வனத்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடம் அருகே, யானை தந்தம் பதுக்கி வைத்திருப்பதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட வனச்சரக அலுவலர் சுப்பையா தலைமையிலான அலுவலர்கள், நேற்று அப்பகுதியில் சோதனையிட்டனர்.
அங்கு, சந்தேகத்திற்கிடமாக நின்ற ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத், முத்துகுமார், சாகிம் அகமது, குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த அபிஜில்லா, வேலுாரைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து இரண்டு யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் எடை 1.50 கிலோ. அவர்களை கைது செய்த திருவள்ளூர் மாவட்ட வனத்துறையினர், யானை தந்தத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.