/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாகசாலை கொசஸ்தலையாற்றில் வெள்ளப்பெருக்கு சாலை அடைப்பால் 60 கிராம மக்கள் அவதி
/
பாகசாலை கொசஸ்தலையாற்றில் வெள்ளப்பெருக்கு சாலை அடைப்பால் 60 கிராம மக்கள் அவதி
பாகசாலை கொசஸ்தலையாற்றில் வெள்ளப்பெருக்கு சாலை அடைப்பால் 60 கிராம மக்கள் அவதி
பாகசாலை கொசஸ்தலையாற்றில் வெள்ளப்பெருக்கு சாலை அடைப்பால் 60 கிராம மக்கள் அவதி
ADDED : டிச 14, 2024 01:52 AM

திருவாலங்காடு:ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், கொசஸ்தலையாற்றில் கலந்து, திருவள்ளூர் மாவட்டத்தில், திருவாலங்காடு, பூண்டி ஒன்றியங்கள் வழியாக பாய்ந்து பூண்டி ஏரியை சென்றடைகின்றன.
கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் மறு கரையில் உள்ள கிராமங்களுக்கு சென்றுவர ஆற்றின் குறுக்கே 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உயர்மட்ட, தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவாலங்காடு ஒன்றியத்தில் ஓரத்தூர் - பாகசாலை கிராமங்கள் இடையே கொசஸ்தலையாறு பாய்கிறது. இங்கு, ஆற்றின் குறுக்கே, 300 மீட்டர் நீளமும், 5 அடி உயரத்திற்கு தரைப்பாலம், 1998ம் ஆண்டு, 1.50 கோடி ரூபாய் செலவில் திருத்தணி மாநில நெடுஞ்சாலை துறையினரால் கட்டப்பட்டது.
இந்த தரைப்பாலம் வழியாக, சின்னம்மாபேட்டை, ஓரத்தூர், பொன்னாங்குளம், மணவூர் உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு வாகனங்கள் வாயிலாக வேலை, கல்லூரி, பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
அதேபோன்று களாம்பாக்கம், சிண்ணமன்டலி, எல்.வி.புரம் உட்பட 20 கிராமத்தினர், திருவாலங்காடு, மணவூர் ரயில் நிலையம் அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இந்த தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர்.
கடந்த வாரம் முதல் தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் நீர்நிலைகளில் உபரிநீர் திறப்பால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் தரைப்பாலத்தை மூழ்கடித்து ஆற்றுநீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
சிலர் அபாயத்தை உணராமல் தரைப்பாலம் வழியாக கடந்து சென்ற நிலையில், நேற்று, காலை 9:00 மணியளவில் தரைப்பாலம் வழியாக வாகனங்கள் செல்லாதவாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் வாயிலாக மண் கொட்டி சாலையை அடைத்தனர்.
இதனால் 60 கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 12 கி.மீ., தூரம் சுற்றி தக்கோலம் வழியாக சென்று வருகின்றனர்.
இதுகுறித்து, பாகசாலையைச் சேர்ந்த பாலாஜி கூறுகையில், 'உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. அதிகாரிகளின் அலட்சியமே காரணம். இதனால் நாங்கள் 12 கி.மீ., சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.