/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் மாவட்டத்தில் 90 ஊராட்சி செயலர்...காலி பணியிடங்கள் :அடிப்படை பிரச்னைக்கு தீர்வு காண்பதில் சுணக்கம்
/
திருவள்ளூர் மாவட்டத்தில் 90 ஊராட்சி செயலர்...காலி பணியிடங்கள் :அடிப்படை பிரச்னைக்கு தீர்வு காண்பதில் சுணக்கம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 90 ஊராட்சி செயலர்...காலி பணியிடங்கள் :அடிப்படை பிரச்னைக்கு தீர்வு காண்பதில் சுணக்கம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 90 ஊராட்சி செயலர்...காலி பணியிடங்கள் :அடிப்படை பிரச்னைக்கு தீர்வு காண்பதில் சுணக்கம்
ADDED : ஜூலை 09, 2025 02:47 AM

கடம்பத்துார்:ஊராட்சி செயலர் பணியிடம் காலியாக உள்ளதோடு, அனைத்து ஊராட்சிகளில் போதிய நிதியும் இல்லாததால், அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கடம்பத்துார், பூந்தமல்லி, திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், 'ஆர்.கே.பேட்டை, சோழாவரம் உள்ளிட்ட 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், 90 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஊராட்சிகளிலும், அருகே உள்ள ஊராட்சி செயலர்கள் கூடுதல் பொறுப்பாக கவனிக்க வேண்டியுள்ளது.
இவர்கள், தங்களது ஊராட்சியில் உள்ள பணிகளை செய்வதற்கே போதிய நேரம் இல்லாத நிலையில், கூடுதலாக இப்பணிகளை கவனித்து வருகின்றனர். ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட கணக்குகளை எழுத்துப்பூர்வமாக ஆவணங்களில் பதிவு செய்து வரும் நிலையில், தற்போது, கம்ப்யூட்டரிலும் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், சொத்து, குடிநீர், தொழில் உள்ளிட்ட பல்வேறு வரியினங்களையும், கிராம மக்களிடம் வசூலித்து வருகின்றனர்.
ஊராட்சி தலைவர்கள் பதவியில் இருந்த போது, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட குறைகளை, அவர்களிடம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது தலைவர் பதவிக்காலம் முடிந்து விட்டதால், அனைத்து தேவைகளுக்கும் ஊராட்சி செயலர்களையே தேடி வருகின்றனர்.
ஒரு ஊராட்சியிலேயே அன்றாட பணிகளை செய்ய முடியாத நிலை இருக்கும்போது, கூடுதலாக மற்றொரு ஊராட்சியையும் கவனித்து வருவதால், ஊராட்சி செயலர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி செயலர்கள் கூறியதாவது:
ஆறு மாதங்களுக்கு மேலாக ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலியாக உள்ளதால், அடிப்படை பிரச்னைகளை தீர்க்க முடியாத அவலநிலை உள்ளது.
மேலும், பெரும்பாலான ஊராட்சியில் செயலர்கள் பணியிடம் காலியாக உள்ளதால், கூடுதலாக மற்றொரு ஊராட்சியை சேர்த்து பார்க்க முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
உள்ளாட்சி அமைப்புகளில் போதுமான நிதி வசதியில்லாத காரணத்தால் சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை பிரச்னைகளை தீர்க்க முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகிறோம். சில நேரங்களில் பொதுமக்களிடம் கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊராட்சி செயலர் காலி பணியிடம் குறித்து அரசுக்கு தெரிவித்துள்ளோம். அரசு உத்தரவுக்கு பின் காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். மேலும், அரசு நிதி ஒதுக்கீடு செய்த பின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி.
கண்ணுார் ஊராட்சிக்குட்பட்ட அரைவாக்கம் பகுதியில், சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட குடிநீர் பிரச்னையால் கடும் அவதிப்பட்டு வந்தோம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், நிதி இல்லாததால் பணிகளை மேற்கொள்ளவில்லை என்கின்றனர். எனவே, ஊராட்சிக்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும். குடிநீர் போன்ற அடிப்படை பிரச்னைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
- வி.முருகன், கண்ணுார்.