/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவருக்கு மவுசு
/
கும்மிடி தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவருக்கு மவுசு
ADDED : மார் 05, 2024 10:36 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பகுதி தொழிற்சாலை வேலைக்கு வட மாநில தொழிலாளர்களுக்கு அழைப்பு விடும் விதமாக, ஹிந்தி மொழியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகள் என, 350 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சாலை விபத்தினால் ஏற்படும் பிரச்னை உள்ளிட்டவற்றை தவிர்க்கும் நோக்கில், பெரும்பாலான தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உள்ளூர் மக்களுக்கு வேலை தர முன் வருவதில்லை.
அதனால், பீஹார், ஒடிசா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை, வேலைக்கு வைத்துள்ளனர். அவர்களும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.
உற்பத்தி பாதிக்காமல் இருக்க, தினசரி தவறாமல் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் என்பதற்காக தொழிற்சாலை வளாகத்தில் அல்லது அதை ஒட்டியுள்ள வாடகை கட்டடத்தில் கூட்டமாக தங்க வைக்கப்படுகின்றனர்.
வட மாநில தொழிலாளர்கள் இருந்தால், குறைந்த செலவில், எந்த பிரச்னையும் இன்றி தொழிற்சாலையை இயக்கலாம் என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் எண்ணுகின்றனர்.
தற்போது, கும்மிடிப்பூண்டி பகுதியில், 15,000த்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மேலும், அவர்களின் தேவை அதிகரித்து வருவதால், வடமாநில தொழிலாளர்களுக்கு மட்டும் அழைப்பு விடும் வகையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் ஒட்டியுள்ள பகுதிகளில், ஹிந்தி மொழியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த சுவரொட்டியில், நிரந்தர வேலைக்கு உதவியாளர்கள் தேவை, தங்கும் அறை, சமையல் எரிவாயு இலவசம், தினசரி, 750 ரூபாய் சம்பளம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, கும்மிடிப்பூண்டி பகுதியில், உள்ளூர் தொழிலாளர்களை புறக்கணித்து, வட மாநில தொழிலாளர்களுக்கு வரவேற்பு அளிக்கும் போக்கு வெளிப்படையாக தெரிய வருகிறது என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

