/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
/
நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
ADDED : பிப் 13, 2024 06:27 AM
பொன்னேரி: பொன்னேரியில் தாலுகா அலுவலக சாலையில், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவை செயல்படுகிறது.
பொன்னேரி ரயில் நிலையம் அருகே, குற்றவியல் நீதிமன்றம் இரண்டும், பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில், மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் இயங்குகின்றன.
இவற்றில், குற்றவியல் நீதிமன்றம் 2 ஐ தவிர்த்து, மற்றவை வாடகை கட்டடங்களில் இயங்குகின்றன. கொலை, கொள்ளை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், சொத்து பிரச்னைகளில் இருப்பவர்கள் என நீதிமன்றங்களுக்கு வந்து செல்கின்றனர்.
நீதிமன்றங்களுக்கு வரும் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் கொண்டு வரும் வாகனங்களால் தாலுகா அலுவலக சாலை, ரயில் நிலைய சாலை, டி.எச்.சாலை ஆகியவை போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பிக்கிறது.
இதனால் ரயில் நிலையம் செல்லும் பயணியர், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது.
சிறைச்சாலைகளில் இருந்து நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படும் குற்றவாளிகள், அவர்களை காண வரும் உறவினர் மற்றும் நண்பர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் என, நீதிமன்ற நாட்களில் இந்த சாலைகள் பரபரப்பாக இருக்கின்றன.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் பயனாக, பொன்னேரி அடுத்த பஞ்செட்டி பகுதியில், ஐந்து ஏக்கர் பரப்பில், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, அதிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, திட்டம் செயல்படுத்துவதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், கடந்த, 10ம் தேதி, மேற்கண்ட இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. நீதிமன்ற கட்டடம், நீதிபதிகள் குடியிருப்பு, அலுவலகம், உணவகம், வாகன நிறுத்துமிடம் என, 49.28 கோடி ரூபாயில் திட்டப்பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்டுமான பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைய உள்ளதால், பொதுமக்கள், ரயில் பயணியர், மருத்துவமனை செல்பவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், வாடகை கட்டடங்களில் இயங்கும் நீதிமன்றங்களுக்கும் விரைவில் விமோசனம் கிடைக்க உள்ளது.