/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீரமைத்தும் பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை
/
சீரமைத்தும் பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை
ADDED : டிச 29, 2024 01:43 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் ஊராட்சியில், பேருந்து நிறுத்தம் அருகே, 2013 --- 14ம் ஆண்டு, 7 லட்ச ரூபாய் மதிப்பில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் பின் மூடப்பட்டது.
இதனால், அப்பகுதிவாசிகள் இயற்கை உபாதையை திறந்தவெளியில் கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எனவே மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, 2022-- - 23ம் ஆண்டு, 15வது நிதிக்குழு மானியத்தில், 3 லட்சத்து, 3,300 ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி நடந்தது. பின், ஓராண்டு ஆன நிலையில் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும் வளாகத்தை தூய்மை செய்யும் பணிக்கு ஆட்கள் வருவதில்லை, நீர் ஏற்றும் மோட்டார் பழுது, மின்சாரம் இல்லை உள்ளிட்ட காரணங்களால் மகளிர் சுகாதார வளாகம் தொடர்ந்து செயல்படுவதில்லை என, கூறப்படுகிறது.
எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பி.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சீரமைக்கப்பட்டு ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.