/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாசில்தார் அலுவலகத்தில் 2 நாள் மட்டுமே ஆதார் சேவை
/
தாசில்தார் அலுவலகத்தில் 2 நாள் மட்டுமே ஆதார் சேவை
ADDED : அக் 27, 2025 12:49 AM
திருத்தணி: திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கி வந்த ஆதார் சேவை மையம், தற்போது இரு நாட்கள் மட்டுமே இயங்கும் என்ற அறிவிப்பால், பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருத்தணி தாசில்தார் அலுவலகத்தின் கீழ்தளத்தில், ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது.
இந்த மையத்திற்கு, 74 வருவாய் கிராமங்களில் இருந்து, புதிதாக ஆதார் எடுப்பது மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு, தினமும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இந்த ஆதார் மையத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 50 - 75 பேருக்கு மேல் ஆதார் சேவை வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர, மீதமுள்ள ஆறு நாட்களும் ஆதார் சேவை மையம் இயங்கி வந்தது.
இந்நிலையில், சில நாட்களாக ஆதார் சேவை மையத்தில், மாணவர்களின் ஆதார் கார்டு புதுப்பித்தல், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்து வருவதால், வாரத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமை மட்டுமே, ஆதார் சேவை மையம் செயல்படும் என அறிவித்து, துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால், தினமும் 100க்கும் மேற்பட்டோர் ஆதார் சேவை மையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
எனவே, தாசில்தார் அலுவலகத்தில் இயங்கும் ஆதார் சேவை மையம், மீண்டும் ஆறு நாட்கள் செயல்படுத்த, கலெக்டர் பிரதாப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

