/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்று பாலத்தில் இரும்பு சட்டங்கள் அடுத்தடுத்து சேதங்களால் விபத்து அபாயம்
/
ஆரணி ஆற்று பாலத்தில் இரும்பு சட்டங்கள் அடுத்தடுத்து சேதங்களால் விபத்து அபாயம்
ஆரணி ஆற்று பாலத்தில் இரும்பு சட்டங்கள் அடுத்தடுத்து சேதங்களால் விபத்து அபாயம்
ஆரணி ஆற்று பாலத்தில் இரும்பு சட்டங்கள் அடுத்தடுத்து சேதங்களால் விபத்து அபாயம்
ADDED : செப் 08, 2025 01:36 AM

ஊத்துக்கோட்டை:ஆரணி ஆற்று பாலத்தில் உள்ள இரும்பு சட்டங்கள் அமைந்துள்ள பகுதி சேதமடைந்து வருவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில், 2017ம் ஆண்டு 27.8 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்ட துவங்கி, 2021ம் ஆண்டு பணி முடிந்து பயன்பாட்டில் உள்ளது.
இந்த பாலம் 450 மீ., நீளம், 15 மீ., அகலத்தில் அமைந்துள்ளது. இரண்டு பக்கமும், 1.5 மீ., சாலை உள்ளது. இதன் வழியே ஊத்துக்கோட்டை, பாலவாக்கம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், திருவள்ளூரில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர்.
இப்பாலத்தை தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடக்கின்றன. அதேபோல், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆந்திராவின், சத்தியவேடு, காளஹஸ்தி, தடா, வரதபாளையம் ஆகிய இடங்களுக்கு சென்றுவர, இந்த பாலத்தை கடந்து, ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றனர்.
இந்த பாலம் குறிப்பிட்ட இடைவெளியில், 20 இரும்பு சட்டங்கள் மூலம் இணைக்கப்பட்டு உள்ளன.
இந்த இரும்பு சட்டங்கள் உள்ள இடத்தில், சிமென்ட் கலவையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் இறுதி பகுதியில் இருந்து பெரிஞ்சேரி வரை, 2.80 கோடி ரூபாய் மதிப்பில் சாலை பணி நடந்து வருகிறது. இதை ஆய்வு செய்ய வரும் நெடுஞ்சாலைத் துறையினர், பாலத்தின் சேதம் குறித்து மக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆரணி ஆற்றின் மேம்பாலத்தில், இரும்பு சட்டங்கள் உள்ள இடத்தில் சேதமடைந்த இடத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறுகையில், 'மழை பெய்து வருவதால், கால தாமதம் ஆகிறது. விரைவில் சேதமடைந்த பகுதிகள் முழுதும் கான்கிரீட் மூலம் சரிசெய்யப்படும்' என்றார்.