ஏரிகளை துார் வாராத நீர்வளத்துறையினர் மீது குற்றச்சாட்டு: நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்
ஏரிகளை துார் வாராத நீர்வளத்துறையினர் மீது குற்றச்சாட்டு: நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்
UPDATED : ஆக 14, 2026 09:33 PM
ADDED : ஆக 14, 2026 07:24 PM

திருத்தணி :
திருத்தணியில் நடந்த விவசாயிகள் நலன்காக்கும் கூட்டத்தில், ஏரிகளை துார்வாரி சீரமைக்காமல், நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக, விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், பொறுப்பு ஆர்.டி.ஓ., முருகவேல் தலைமையில் நேற்று நடந்தது. நேர்முக உதவியாளர் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் தாசில்தார்கள், வேளாண் உதவி இயக்குநர் உட்பட, அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
வருவாய் கோட்டத்தில், நீர்வளத்துறையினர், 74 ஏரிகளை பராமரித்து வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏரிகளை துார் வாராமலும், நீர்வரத்து கால்வாயை சீரமைக்காமலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
இதனால், பல ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் ஏரிகள் ஆக்கிரமிப்பு, கால்வாய், மதகு, கரை சேதம் குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுகின்றனர்.
இந்த விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கடமைக்காக நடத்தப்படுகிறதே தவிர, புகார்கள் மீது தீர்வு காண்பதில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
