/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பால பணியில் குறைபாடுகள் இருந்தால் நடவடிக்கை: தலைமை பொறியாளர் கறார்
/
பால பணியில் குறைபாடுகள் இருந்தால் நடவடிக்கை: தலைமை பொறியாளர் கறார்
பால பணியில் குறைபாடுகள் இருந்தால் நடவடிக்கை: தலைமை பொறியாளர் கறார்
பால பணியில் குறைபாடுகள் இருந்தால் நடவடிக்கை: தலைமை பொறியாளர் கறார்
ADDED : ஜன 25, 2025 01:34 AM

திருவாலங்காடு::திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு -- பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், ஓரத்தூர் -- பாகசாலை இடையே கொசஸ்தலை ஆறு செல்கிறது.
இங்கு, ஆற்றின் குறுக்கே, 100 மீட்டர் நீளமும், 5 அடி உயரத்திற்கு, 1998ம் ஆண்டு, 1.5 கோடி ரூபாய் மதிப்பில், திருத்தணி நெடுஞ்சாலை துறையினரால் தரைப்பாலம் கட்டப்பட்டது.
இந்த தரைப்பாலம் வழியாக, சின்னம்மாபேட்டை, ஓரத்தூர், பொன்னாங்குளம், மணவூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்து உட்பட வாகனங்கள் வாயிலாக வேலை, கல்லூரி பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், 2022ம் ஆண்டில், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் தரைப்பாலம் சேதமடைந்தது. அதை தொடர்ந்து, 20 -30 நாட்கள் வரை தரைப்பாலத்தை கடந்து ஆற்று நீர் சென்றதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
மேலும், தரைப்பாலத்தை பலப்படுத்த அமைக்கப்பட்ட கற்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால், தரைப்பாலம் பலமிழந்து உடையும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் அப்பகுதியினர் அச்சமடைந்தனர்.
எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், பலமிழந்துள்ள தரைப்பாலத்தை அகற்றி உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, பாகசாலை கொசஸ்தலை ஆற்றை கடக்க, நபார்டு மற்றும் கிராம சாலை திட்டம் வாயிலாக, 19.5 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்க, கடந்தாண்டு ஜனவரியில் டெண்டர் விடப்பட்டு பணி துவங்கியது.
அதன்படி, 240 மீட்டர் நீளத்திற்கு, 12 மீட்டர் அகலத்திற்கு, 22.8 மீட்டர் இடைவெளியில் 10 தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது, பணி நடந்து வரும் நிலையில் நெடுஞ்சாலைத் துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்ட தலைமைப் பொறியாளர் தேவராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, 'பணிகளை வேகமாகவும், அதே வேளையில் தரமான முறையில் செய்ய வேண்டும், உயர்மட்டப் பாலப்பணியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அப்போது நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்ட செங்கல்பட்டு கோட்டப் பொறியாளர் சிவசேனா உட்பட பலர் உடனிருந்தனர்.