/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் தொடரும் குற்றங்களை கட்டுப்படுத்த... நடவடிக்கை :ஒன்பது காவல் நிலையங்களை தரம் உயர்த்தி உத்தரவு
/
திருவள்ளூரில் தொடரும் குற்றங்களை கட்டுப்படுத்த... நடவடிக்கை :ஒன்பது காவல் நிலையங்களை தரம் உயர்த்தி உத்தரவு
திருவள்ளூரில் தொடரும் குற்றங்களை கட்டுப்படுத்த... நடவடிக்கை :ஒன்பது காவல் நிலையங்களை தரம் உயர்த்தி உத்தரவு
திருவள்ளூரில் தொடரும் குற்றங்களை கட்டுப்படுத்த... நடவடிக்கை :ஒன்பது காவல் நிலையங்களை தரம் உயர்த்தி உத்தரவு
ADDED : ஆக 07, 2025 02:06 AM

திருவள்ளூர்:திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சப் - இன்ஸ்பெக்டர்கள் நிர்வகிக்கும், 18 காவல் நிலையங்களை, இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வரும் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த, இந்த நிர்வாக மாற்றம் வழிவகுக்கும் என, காவல் துறையினர் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆந்திரா மாநிலத்தை ஒட்டியுள்ளதால், அங்கிருந்து திருத்தணி, எளாவூர் வழியாக அதிகளவில் கஞ்சா கடத்தி வரப்பட்டு, நகர் முழுதும் விநியோகிக்கப்படுகிறது.
கஞ்சாவை அதிகம் பயன்படுத்தும் வாலிபர்கள், போதையில் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை என, ஐந்து காவல் உட்கோட்டங்கள் உள்ளன. இவற்றில், 19 காவல் நிலையங்கள், ஐந்து மகளிர் காவல் நிலையங்கள் என, மொத்தம் 24 காவல் நிலையங்கள் உள்ளன .
இதில், கடம்பத்துார், மப்பேடு, புல்லரம்பாக்கம், பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, கனகம்மாசத்திரம், கவரப்பேட்டை, ஆரணி, பென்னலுார்பேட்டை, எப் 2 சிப்காட், பாதிரிவேடு ஆகிய 11 காவல் நிலையங்கள், சப் - இன்ஸ்பெக்டர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தன.
இந்த நிலையங்களில் போலீசார் பற்றாக்குறையால், ரோந்து பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. விசாரணை கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்வது, வழக்கு ஆவணங்களை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, போலீசாரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மேற்கண்ட 11 காவல் நிலையங்களில், கடம்பத்துார், மப்பேடு, பென்னலுார்பேட்டை, கவரைப்பேட்டை, ஆரணி, கனகம்மாசத்திரம், எப் - 2 சிப்காட், பாதிரிவேடு, பொதட்டூர்பேட்டை ஆகிய 9 காவல் நிலையங்களை இன்ஸ்பெக்டர் நிர்வாகத்திற்கு தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுதும், சப் - இன்ஸ்பெக்டர்கள் நிர்வகிக்கும், 280 காவல் நிலையங்களை இன்ஸ்பெக்டர் நிர்வாகத்திற்கு மாற்றி, தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போதுள்ள விதிகளின்படி, கொலை, இறப்பு, விபத்துகள், கொள்ளை போன்ற கடும் குற்றங்களை இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே விசாரிக்க வேண்டும். மக்கள்தொகை பெருக்கத்தால், குற்றங்களும் அதிகரித்துள்ளன.
ஒரு காவல் வட்டத்தில், 2 - 3 காவல் நிலையங்களுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் பணியில் இருப்பதால், குற்ற வழக்குகளுக்கான விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது. தவிர, பல சப் - இன்ஸ்பெக்டர்களும் பதவி உயர்வு இல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில், உயர்த்தப்பட்ட 280 காவல் நிலையங்கள், இனி எந்த சூழ்நிலையிலும், சப் - இன்ஸ்பெக்டர் நிர்வாகத்திற்கு மாற்றப்படாது.
இந்த, 280 காவல் நிலையங்களுக்கு தேவையான வாகனங்கள், மேஜைகள் மற்றும் இதர செலவு மேம்பாட்டிற்காக, தமிழக காவல் துறை சார்பில், 1.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினங்களை செய்ய, காவல் துறை டி.ஜி.பி.,க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சப் - இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இயங்கி வந்த, 280 காவல் நிலையங்கள், இனி ஆய்வாளர்கள் தலைமையில் இயங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாகரல், சாலவாக்கம், பெருநகர், பாலுார் ஆகிய காவல் நிலையங்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்தாமூர், அணைக்கட்டு, சத்ராஸ், கூவத்துார், காயார் என, ஐந்து காவல் நிலையங்களும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.
அந்த வகையில், மூன்று மாவட்டங்களிலும், மொத்தம் 18 காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளன. காவல் நிலையங்களை தரம் உயர்த்தியிருப்பதால், நிர்வாக வசதிகளுக்கும், குற்றங்களை கட்டுப்படுத்தவும் வசதியாக இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.
ஒரு இன்ஸ்பெக்டர், 2 அல்லது 3 சப் - இன்ஸ்பெக்டர் நிர்வகிக்கும் காவல் நிலையங்களை கவனித்து வந்தார். இதனால், வழக்குகளை விசாரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, புதிய இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், வழக்குகளை விரைவாக விசாரிக்க முடியும். இதன் மூலம் மக்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவில் தீர்வு கிடைக்கும். - காவல் துறை அதிகாரி, திருவள்ளூர்.