/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெற்பயிர்களில் பச்சைப்பாசி கட்டுப்படுத்த ஆலோசனை
/
நெற்பயிர்களில் பச்சைப்பாசி கட்டுப்படுத்த ஆலோசனை
ADDED : ஜூலை 13, 2025 10:35 PM
பொன்னேரி:சொர்ணவாரி பருவத்திற்கு நெல் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் உள்ள பச்சைப்பாசிகளை கட்டுப்படுத்த, வேளாண் துறை ஆலோசனை வழங்கி வருகிறது.
மீஞ்சூர் வட்டாரத்தில் சொர்ணவாரி பருவத்திற்கு, 15,000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. வளர்ந்து வரும் நெற்பயிர்களில், பச்சைப்பாசிகள் படர்ந்து, வளர்ச்சியை பாதித்து வருகிறது. இதிலிருந்து நெற்பயிர்களை பாதுகாக்க வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
மீஞ்சூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் டில்லிகுமார் கூறியதாவது:
தற்போதுள்ள தட்பவெப்ப சூழ்நிலையால், நெற்பயிர்கள் பச்சைப்பாசிகளால் பாதிக்கக்கூடும். குறிப்பாக, உவர் நிலங்களில் இவற்றின் பாதிப்பு அதிகமாக காணப்படும்.
அதிக வெப்பம், அதிக உரம், மணிச்சத்து அதிகமாக இடுதல் போன்ற காரணங்களால் பச்சைப்பாசிகள் அதிகரிக்கும்.
இவை நீரின் மேற்பரப்பில் அடர்த்தியாக படர்ந்து, பயிர்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைப்பதை தடுக்கும். பயிர்களின் வேர் வளர்ச்சி பாதித்து, விரைவாக அழுகி விடும்.
இதை கட்டுப்படுத்த, களையெடுக்கும் கருவிகளை கொண்டு பாசிகளை கட்டுப்படுத்த வேண்டும். அதிக பாதிப்பிற்கு உள்ளான நெற்பயிர்களில், 2.5 கிராம் காப்பர் ஹைட்ராக்சைடு ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் அல்லது 1 ஏக்கருக்கு, 2 கிலோ காப்பர் சல்பேட், 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் துாவலாம்.
நெல் பயிரிடுவதற்கு முன், மண்ணின் உவர்தன்மையை சரிசெய்ய, 1 ஏக்கருக்கு 400 கிலோ ஜிப்சம் போட்டு நீரை தேக்கி வைத்து, பின் வடித்து விட வேண்டும்.
சணப்பை அல்லது தக்கை பூண்டு ஆகிய பசுந்தால் உர பயிர்களை வளர்த்து, 45 நாட்களுக்கு பின், மண்ணுடன் சேர்த்து உழலாம். இதன் மூலமாக மண் வளத்தை மேம்படுத்தி உவர் தன்மையை குறைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.