/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள் ஜரூர் பக்தர்களால் 21 ஆண்டுக்கு பின் விமோசனம்
/
அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள் ஜரூர் பக்தர்களால் 21 ஆண்டுக்கு பின் விமோசனம்
அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள் ஜரூர் பக்தர்களால் 21 ஆண்டுக்கு பின் விமோசனம்
அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள் ஜரூர் பக்தர்களால் 21 ஆண்டுக்கு பின் விமோசனம்
ADDED : அக் 27, 2025 12:59 AM

பொன்னேரி: பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில், 21 ஆண்டுகளுக்கு பின் பக்தர்களின் நிதியுதவியால், வெளி பிரகார சுற்றுச்சுவர், உள்பிரகார தரை தளம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடைபெறுகின்றன.
பொன்னேரியில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், 800 ஆண்டுகள் பழமையானது. இது, சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அழகிய துாண்கள், சிற்பங்கள் என, சோழர்களின் கட்டட கலைக்கு சான்றாக இக்கோவில் அமைந்துள்ளது.
அகத்திய முனிவர் வழிபட்ட ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோவிலில் அகத்தீஸ்வரர், விநாயகர், ஆனந்தவல்லி தாயார் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. சண்டிகேஸ்வரர் மற்றும் நவகிரக சன்னிதிகளும் அமைந்துள்ளன.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், அரிஅரன் சந்திப்பு திருவிழா, பிரதோஷம், சிவராத்திரி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவர்.
கடந்த 2004ல், இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடந்த நிலையில், அதற்கான நடவடிக்கை இல்லாததால், பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.
ஹிந்து சமய அறநிலையத் துறையினரிடம், பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், அறங்காவலர் குழுவினரின் முயற்சியால், தற்போது அகத்தீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
வெளி பிரகாரத்தில் பல ஆண்டுகளாக சேதமடைந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டு, பாறை கற்களை வைத்து புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது.
உள்பிரகாரத்தில் கோவிலை சுற்றிலும் தரைதளம் அமைப்பது, விநாயகர் கோவிலை, 'லிப்டிங்' தொழில்நுட்பத்தில் உயர்த்தி புதுப்பிப்பது என, 3 கோடி ரூபாயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், ராஜகோபுரம், அம்மன், மூலவர், உத்சவர் சன்னிதிகளின் கோபுரங்களும் புனரமைக்கப்பட்டு வருகிறது. திருப்பணிகளுக்கு செலவினங்கள், பக்தர்களின் நிதியுதவியால் செய்யப்படுகிறது.
பல்வேறு பணிகள் நடைபெறும் நிலையில், பக்தர்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் திருப்பணி குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பங்குனி பிரம்மோத்சவத்திற்கு முன், திருப்பணிகளை முடித்து, கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், 21 ஆண்டுகளுக்கு பின் விமோசனம் கிடைத்துள்ளது.

