/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிரதான ஏரிகளை ஆக்கிரமித்து விவசாய பணிகள்அட்டூழியம்!: துார் வாரப்படாததால் மழைநீர் தேங்காத அவலம்
/
பிரதான ஏரிகளை ஆக்கிரமித்து விவசாய பணிகள்அட்டூழியம்!: துார் வாரப்படாததால் மழைநீர் தேங்காத அவலம்
பிரதான ஏரிகளை ஆக்கிரமித்து விவசாய பணிகள்அட்டூழியம்!: துார் வாரப்படாததால் மழைநீர் தேங்காத அவலம்
பிரதான ஏரிகளை ஆக்கிரமித்து விவசாய பணிகள்அட்டூழியம்!: துார் வாரப்படாததால் மழைநீர் தேங்காத அவலம்
ADDED : நவ 07, 2024 01:11 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதான ஏரிகளை ஆக்கிரமித்து, விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயத்திற்காக ஏரி கரைகளை உடைத்து விடுவதால், மழை காலங்களில் மழைநீர் தேங்காமல் வீணாகி வருகிறது.
திருவள்ளூர் ஒன்றியத்தில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில், 63 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், 163 குளங்கள், 40 ஏரிகள், மூன்று ஊரணிகள் உள்ளன.
இவற்றை நம்பி, 19,760 ஏக்கரில் விவசாய பணிகள் நடைபெறுகின்றன. நெல், கரும்பு அதிகளவில் பயிரிடப்படுகிறது.
ஒன்றியத்தில் பெரிய ஏரிகளான ஈக்காடு ஏரி - 356 ஏக்கர், புன்னப்பாக்கம் ஏரி - 163, ஈக்காடு கண்டிகை - 150, தலக்காஞ்சேரி - புல்லரம்பாக்கம் இணைந்த ஈசா ஏரி - 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. தற்போது இந்த ஏரிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டன.
ஏரிக்குள் விவசாயம்
இந்த ஏரிகளை நம்பி, 3,000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால், இந்த ஏரிகளை சிலர் ஆக்கிரமித்து நெல், கரும்பு பயிரிட்டுள்ளனர்.
ஏரி நிரம்பினால் உபரிநீர் வெளியேறும் கலங்கல் அருகே நெல் பயிரிட்டுள்ளனர். ஏரிக்குள் தண்ணீர் தேங்கினால், விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதி, வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக, அனைத்து ஏரிகளும் விளைநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட்டும், துார் வாரப்படாமலும் உள்ளது.
கரைகளும் உடைப்பு
ஏரிக்குள் நடைபெறும் விவசாய பணிகளுக்கு, உரம், பூச்சி மருந்து கொண்டு செல்லவும், அறுவடை செய்யப்படும் பயிர்களை கொண்டு வரவும், கரையை உடைத்து பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால், புல்லரம்பாக்கம், ஈக்காடு, புன்னப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், ஏரியை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள், அவதிப்பட்டு வருகின்றனர்.
இவற்றை தடுக்க வேண்டிய பொதுப்பணித் துறையினர், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:
நீர்நிலை மற்றும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பொதுப்பணி மற்றும் வருவாய் துறையினர், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை என்ற பெயரில் கண்துடைப்பு நடவடிக்கை எடுத்தனரே தவிர, முழுவதுமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இதேநிலை தான் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நிலவுகிறது. இதன் காரணமாகவே, கடந்த மாதம் பெய்த பலத்த மழையில், ஏரிகளுக்கு நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.
எனவே, ஏரி ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி, கரையை சீரமைத்து, ஏரிகளை துார்வார வேண்டும். இன்னும் சில நாட்களில் அதிக மழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.
இருப்பினும், ஏரிகளில் நிலவும் ஆக்கிரமிப்பால், மழைநீர் தேங்காமல் வீணாகி விடும். எனவே, கலெக்டர் ஆய்வு செய்து, ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சோழவரம்
சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. ஏரியின் கரைகள் சேதம் அடைந்ததை தொடர்ந்து, அதை சீரமைக்கும் பணிகள் கடந்த, ஆறு மாதங்களாக நடைபெறுகிறது.
கரையின் உள்பகுதியில் கான்கிரீட் சுவர் அமைப்பது, மண் அரிப்பை தவிர்க்க சரிவுகளில் பாறைகள் பதிக்கப்படுவது உள்ளிட்ட தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏரியில் தண்ணீர் தேங்கியிருந்ததால், பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம், அவற்றை பேபி கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
வழக்கமாக நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் சோழவரம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும். தற்போது ஏரியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த ஆண்டு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.
அதேசமயம் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து, ஏரிக்கு அதிகப்படியான தண்ணீர் வரத்து இருக்கும். சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்படுவதை தவிர்க்கவும், ஏரிக்கு வரும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றவும் திட்டமிட்டு, ஏரியின் கலங்கல் பகுதியில் புதியதாக இரண்டு ஷட்டர்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
ஏரிக்கு வரும் தண்ணீரை ஷட்டர்கள் வழியாக கொசஸ்தலை ஆற்றிற்கு கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் ஒரிரு நாளில் முடிவடையும் என நீர்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சோழவரம் ஏரியில் சீரமைப்பு பணிகளால் இந்த ஆண்டு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழலில், தற்போது, 0.084 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டைவிட, 0.52டி.எம்.சி., குறைவாகும்.