/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாடகைக்கு வேளாண் இயந்திரங்கள் கிடைப்பதில்லை உழவு, அறுவடை இயந்திரம் இல்லாததால் அதிருப்தி
/
வாடகைக்கு வேளாண் இயந்திரங்கள் கிடைப்பதில்லை உழவு, அறுவடை இயந்திரம் இல்லாததால் அதிருப்தி
வாடகைக்கு வேளாண் இயந்திரங்கள் கிடைப்பதில்லை உழவு, அறுவடை இயந்திரம் இல்லாததால் அதிருப்தி
வாடகைக்கு வேளாண் இயந்திரங்கள் கிடைப்பதில்லை உழவு, அறுவடை இயந்திரம் இல்லாததால் அதிருப்தி
ADDED : ஜூன் 27, 2025 01:46 AM
திருவாலங்காடு:வேளாண் பொறியியல் துறை வாயிலாக வாடகைக்கு விடப்படும் நெல் அறுவடை மற்றும் உழவு இயந்திரங்கள் இல்லாததால், விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தேவையான இயந்திரங்கள் இல்லாததால், அலைச்சல், பண விரயம் ஏற்படுவதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி பொன்னேரி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பூந்தமல்லி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உட்பட ஒன்பது தாலுகாக்களில், 2.10 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இதில், சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களில், நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
சம்பா, நவரை ஆகிய இரு பருவங்களில், 1.10 ஏக்கர் நிலப்பரப்பிலும், சொர்ணவாரி பருவத்தில், 65,000 ஏக்கர் பரப்பளவிலும் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களில், மொத்தம் 1.75 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். மாவட்டத்தில் நெல் பிரதான பயிராக விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
விவசாய பணிகளை எளிமைபடுத்தவும், சுமையை குறைக்கவும், வேளாண் பொறியியல் துறை பல்வேறு திட்டங்கள் வாயிலாக விவசாய இயந்திரங்களை வழங்கி வருகிறது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாக்களிலும், 3 - 4 டிராக்டர்கள், 2 - 3 பொக்லைன், ட்ரோசர் இயந்திரம் - 2 மற்றும் கரும்பு அறுவடை இயந்திரம் - 2 உள்ளன.
இங்கு, உழவு மற்றும் அறுவடை இயந்திரங்கள் இல்லாததால், நெல் விவசாயிகள் தனிநபர்களிடம் இருந்து இயந்திரங்களை வரவழைத்து, விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.
இதனால், தங்களுக்கு இரட்டிப்பு தொகை செலவு ஏற்படுவதாகவும், அறுவடை காலங்களில் இயந்திரங்கள் கிடைக்காமல் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் புலம்புகின்றனர்.
மேலும், விவசாயத்திற்கு முக்கியமான உழவு மற்றும் அறுவடை இயந்திரம், வேளாண் பொறியியல் துறை சார்பில் மாவட்டத்தில் இல்லாதது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, திருவாலங்காடைச் சேர்ந்த விவசாயி ராமன் கூறியதாவது:
திருவாலங்காடு வட்டாரத்திற்கு, திருத்தணியில் இருந்து விவசாய இயந்திரங்கள் வரவழைக்கப்படுகிறது. தேவையான நேரத்தில் இயந்திரங்கள் கிடைக்காமல், 2 - 3 நாட்கள் கழித்து தான் கிடைக்கிறது. திருவாலங்காடு பகுதியில் இயந்திரங்களை அமர்த்தினால் பயனாக இருக்கும்.
உழவு இயந்திரங்கள் மற்றும் நிலத்தை சமன் செய்வதற்கான இயந்திரம் - கிரவுண்ட் லெவலர், நடவு இயந்திரங்களும் இல்லை. இதனால், தனியாரிடம் இரு மடங்கு கூடுதல் வாடகைக்கு கருவிகளை வாங்கி பயன்படுத்துகிறோம்.
அவர்களோ விவசாயிகளின் நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, இரு மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றனர். வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரத்திலும் விவசாய பணிகளுக்கு தேவையான இயந்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.