/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடில் வேளாண் அலுவலகம் 4 கி.மீ., தூரத்தில் கிடங்கு: விவசாயிகள் அவதி
/
திருவாலங்காடில் வேளாண் அலுவலகம் 4 கி.மீ., தூரத்தில் கிடங்கு: விவசாயிகள் அவதி
திருவாலங்காடில் வேளாண் அலுவலகம் 4 கி.மீ., தூரத்தில் கிடங்கு: விவசாயிகள் அவதி
திருவாலங்காடில் வேளாண் அலுவலகம் 4 கி.மீ., தூரத்தில் கிடங்கு: விவசாயிகள் அவதி
ADDED : பிப் 09, 2025 09:34 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு வட்டார வேளாண் அலுவலகத்திற்க்கு உட்பட்டு, கனகம்மாசத்திரம், பூனிமாங்காடு, திருவாலங்காடு, மணவூர், உட்பட நான்கு குறுவட்டங்களில், 42 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில், 20,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது.
தோட்டக்கலை பயிர்களான காய்கறி, பூ வகைகளும், குறிப்பிட்ட பருவத்தில் பயிரிடப்படுகின்றன. விவசாயிகள், வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படும் உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்களை வாங்க, திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம் அருகே செயல்பட்ட, ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அந்த கட்டடம் சேதமடைந்ததால், அவை இடிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையமாக உயரத்தி புதிய கட்டடம் கட்ட முடிவானது. அதற்கான பணி நடந்து வருகிறது.
தற்காலிகமாக, ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம், திருவாலங்காடில் பழையனூர் செல்லும் சாலையில் வாடகை கட்டடத்தில், இயங்கி வருகிறது.
ஆனால், கிடங்கோ, திருவாலங்காடு ஒன்றியம், அத்திப்பட்டு ஊராட்சியில், தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனால் வேளாண் அலுவலகத்திற்கு இடுப்பொருட்களை வாங்க வருவோர், திருவாலங்காடில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் உள்ள அத்திப்பட்டுக்கு சென்று வாங்கி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் தங்களுக்கு வீண் அலைச்சல் மற்றும் செலவீனம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
எனவே, திருவாலங்காடில் வேளாண் அலுவலகம் அருகே விவசாய இடுப்பொருட்கள் கிடங்கு இருந்தால் வசதியாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட வேளாண் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
திருவாலங்காடில் இடுப்பொருட்களை வைத்து பாதுகாக்கும் அளவு கிடங்கு கட்டடம் கிடைக்கவில்லை. அதனால், அத்திப்பட்டில் இயங்கி வருகிறது. விரைவில் ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டடப்பட உள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, திருவாலங்காடு அருகே உள்ள கிராமங்களில் கிடங்கு பயன்படுத்தும் அளவு கட்டடம் உள்ளதா என, ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.