/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆண்டுக்கு ஒரு பருவம் மட்டும் விவசாயம் தொடர் மழையால் பொன்னேரியில் அதுவும் போச்சு
/
ஆண்டுக்கு ஒரு பருவம் மட்டும் விவசாயம் தொடர் மழையால் பொன்னேரியில் அதுவும் போச்சு
ஆண்டுக்கு ஒரு பருவம் மட்டும் விவசாயம் தொடர் மழையால் பொன்னேரியில் அதுவும் போச்சு
ஆண்டுக்கு ஒரு பருவம் மட்டும் விவசாயம் தொடர் மழையால் பொன்னேரியில் அதுவும் போச்சு
ADDED : ஜன 24, 2025 01:14 AM

பொன்னேரி:பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், சம்பா பருவத்திற்கு, 45,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டது. இதில், பொன்னேரியை சுற்றியுள்ள கோளூர், திருப்பாலைவனம், காட்டூர் ஆகிய குறுவட்டங்களில் உள்ள 100க்கும் அதிகமான கிராமங்கள் பருவமழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்கின்றன.
மேற்கண்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பு காரணமாக, அதை பயன்படுத்த முடியாமல் மழைநீரே விவசாயத்திற்கான நீர் ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் பெஞ்சல் புயல் காரணமாக, செப்டம்பர் துவங்கி, ஜனவரி வரை தொடர் மழை பொழிவு இருந்தது.
வழக்கமாக பருவமழை விட்டுவிட்டு பொழியும் நிலையில், இம்முறை இடைவிடாமல் பெய்து வந்ததால் நெற்பயிர்களின் வளர்ச்சி பாதித்தன.
வளர்ந்த நெற்பயிர்களும் விளைநிலங்களில் தேங்கிய மழைநீரில் நீண்டநாட்கள் மூழ்கி, முளைத்து வீணாயின.
தற்போது மழை முடிந்து, விவசாயிகள் அறுவடை பணிகளில் ஈடுபட்டு உள்ள நிலையில், மகசூல் பாதித்து வருவாய் இழப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
ஆண்டுக்கு ஒரு முறை மட்டும சம்பா பருவத்தில் நெல் பயிரிடுவோம். அதன் வாயிலாக கிடைக்கும் வருவாயே ஒரு ஆண்டிற்கான எங்களது வாழ்வாதாரமாக இருக்கும்.
இந்த ஆணடு நெல் பயிரிட துவங்கிய காலம் முதல் மழை பொழிவு இருந்தது. காய்ச்சல், பாய்ச்சல் முறையில் தான் நெற்பயிர்கள் சீரான வளர்ச்சி பெறும். இம்முறை நெல் பயிரிடப்பட்ட விளைநிலங்களை எப்போதும் மழைநீர் தேங்கி, ஈரப்பதத்துடன் இருந்ததால் சீரான வளர்ச்சி இல்லை.
மேலும், தண்ணீரில் விழுந்து கிடந்தவை முளைத்தும் போயின. மழைக்கு தப்பிய விளைநிலங்களில் தற்போது அறுவடை செய்து வரும் நிலையில், ஒரு ஏக்கருக்கு, 17 - 20 மூட்டைகளே கிடைக்கின்றன. வழக்கமாக, ஏக்கருக்கு, 30 - 32 மூட்டைகள் கிடைக்கும்.
இந்த ஆண்டு, மகசூல் பாதித்து உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை விவசாயம் செய்யும் நிலையில், தொடர் மழையால் இந்த ஆண்டும் அதுவும் போச்சு. அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.