/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 'அம்போ' ரூ.90 லட்சம் மதிப்பில் அமைத்த கட்டமைப்புகள் வீண்
/
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 'அம்போ' ரூ.90 லட்சம் மதிப்பில் அமைத்த கட்டமைப்புகள் வீண்
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 'அம்போ' ரூ.90 லட்சம் மதிப்பில் அமைத்த கட்டமைப்புகள் வீண்
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 'அம்போ' ரூ.90 லட்சம் மதிப்பில் அமைத்த கட்டமைப்புகள் வீண்
ADDED : மார் 16, 2025 02:39 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்ட பணிகள், முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வராமலேயே கிடப்பில் போடப்பட்டது. இதற்காக, 90 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் சாண எரிவாயு தொட்டியும் பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்து வீணாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், தினமும் 1,8-20 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில், 1,5---17 டன் வரை துப்புரவு ஊழியர்கள் வாயிலாக தினமும் பெறப்படுகிறது. மீதமுள்ள குப்பை சுழற்சி முறையில் அள்ளப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பை மட்கும் மற்றும் மட்கா குப்பை என, தனித்தனியாக பிரிக்கப்படுகிறது.
மட்கும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க, நகராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. அதாவது, காய்கறி, பூ மார்க்கெட் கழிவு, ஹோட்டல் மற்றும் திருமண மண்டபங்களில் இருந்து வெளியேற்றப்படும் வாழை இலை ஆகியவற்றில் இருந்து, மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு, 2013ம் ஆண்டு நகர் ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ், 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பின், 2013 அக்டோபர் 2ம் தேதி இப்பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டது. தொடர்ந்து, 2014 மார்ச் மாதம், 13வது வார்டு, அரக்கோணம் சாலை ஒன்றிய அலுவலகம் எதிரே, 9,600 சதுர அடியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ஆறு மாதங்களில் பணிகள் முடித்து, மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவக்கப்படும் என, நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், ஒன்றரை ஆண்டிற்கு பின் தான் பணிகள் முழுமையடைந்தது. தொடர்ந்து, மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு நிறுவனத்தில் இருந்து சான்று கிடைக்காததால், மேலும் ஓராண்டு காலதாமதம் ஏற்பட்டது.
ஒரு வழியாக 2019ல் மாசுக் கட்டுப்பாடு நிறுவனத்தில் இருந்து சான்று கிடைத்ததும், 2020ல் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவக்கப்பட்டது. பின், ஆறு மாதங்கள் மின்சாரம் தயாரித்து, அப்பகுதியில் உள்ள தெரு விளக்குகளுக்கு முதலில் மின்வினியோகம் செய்யப்பட்டது.
மேலும், ஜெனரேட்டர் இயக்கும் அளவுக்கு மின்சாரம் தயாரித்த நிலையில், அப்போது பெய்த கனமழையால், காய்கறி அரைக்கும் அறை முழுதும் மழைநீர் சூழ்ந்தது. இதனால், அத்திட்டம் கைவிடப்பட்டது.
அதன்பின் வந்த அதிகாரிகளும், மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முனைப்பு காட்டாததால் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, அந்த இடத்தில் செடிகள் வளர்ந்தும், உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. மொத்தத்தில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.
திட்டம் செயல்படுவதில் கடினம்
இதுகுறித்து திருத்தணி நகராட்சி உயரதிகாரி கூறியதாவது:
சாண எரிவாயு தொட்டி மற்றும் காய்கறி அரைக்கும் அறை தாழ்வான பகுதியில் உள்ளது. இதனால், கனமழை பெய்தால், அப்பகுதி முழுதும் மழைநீர் சூழ்ந்துவிடுகிறது. மேலும், மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் காய்கறி, இறைச்சி மற்றும் வாழை இலை போன்ற கழிவுகள், தற்போது நகராட்சியில் கிடைக்கவில்லை.
மேலும், மின்சாரம் தயாரிக்க 15 டன் பசு சாணமும் தேவைப்படுகிறது. அதுவும் தற்போது கிடைக்காத நிலை உள்ளதால், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.