/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடை உதவி மருத்துவர் இல்லாததால் ஓய்வெடுக்கும் ஆம்புலன்ஸ் வாகனம்
/
கால்நடை உதவி மருத்துவர் இல்லாததால் ஓய்வெடுக்கும் ஆம்புலன்ஸ் வாகனம்
கால்நடை உதவி மருத்துவர் இல்லாததால் ஓய்வெடுக்கும் ஆம்புலன்ஸ் வாகனம்
கால்நடை உதவி மருத்துவர் இல்லாததால் ஓய்வெடுக்கும் ஆம்புலன்ஸ் வாகனம்
ADDED : ஜூன் 19, 2025 02:08 AM

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில், 23 கால்நடை மருந்தகம், ஐந்து கிளை நிலையங்கள் வாயிலாக, 90,000க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம், கால்நடை மருந்தகங்களுக்கு இடையே தொலைதுாரம் உள்ள கிராம விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக, '1962' என்ற நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருத்தணி கோட்டத்தில் இரு வாகனங்கள் வாயிலாக, ஒரு நாளைக்கு இரண்டு ஊராட்சிகளுக்கு சென்று கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் பொது சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை அவசர சிகிச்சைக்கு மட்டும் வாகனம் செல்லும். இதற்காக, வாகனத்தில் ஒரு கால்நடை உதவி மருத்துவர், உதவியாளர் மற்றும் ஓட்டுநர் என, மூன்று பேர் நியமிக்கப்பட்டனர்.
ஒன்றரை மாதமாக நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் இயங்காமல் மரத்தடியில் ஓய்வெடுக்கிறது. இதற்கு காரணம், கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு வராமல் இருப்பது தான்.
இதனால், கால்நடைகளுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட கால்நடை துறை அதிகாரி கூறியதாவது:
மாவட்டத்தில் ஆறு நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் உள்ளன. தனியார் துறையின் வாயிலாக கால்நடை உதவி மருத்துவர்கள், உதவியாளர், ஓட்டுநர் நியமித்து, கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கால்நடை உதவி மருத்துவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு, அரசின் நியமன தேர்வுக்காக படித்து வருகின்றனர். இதனால், நடமாடும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
விரைவில் வாகனங்கள் வாயிலாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.