/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி குப்பை கழிவால் பாழாகும் ஆரணி ஆறு...வேதனை! :வளத்தை மீட்கும் 'பயோ மைனிங்' திட்டம் முடக்கம்
/
பொன்னேரி குப்பை கழிவால் பாழாகும் ஆரணி ஆறு...வேதனை! :வளத்தை மீட்கும் 'பயோ மைனிங்' திட்டம் முடக்கம்
பொன்னேரி குப்பை கழிவால் பாழாகும் ஆரணி ஆறு...வேதனை! :வளத்தை மீட்கும் 'பயோ மைனிங்' திட்டம் முடக்கம்
பொன்னேரி குப்பை கழிவால் பாழாகும் ஆரணி ஆறு...வேதனை! :வளத்தை மீட்கும் 'பயோ மைனிங்' திட்டம் முடக்கம்
ADDED : ஜன 24, 2025 08:01 PM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சியில், நீண்ட காலமாக தேங்கி கிடக்கும் கழிவை அகற்றுவதற்கு செயல்படுத்தப்பட்ட, 'பயோ மைனிங்' திட்டம் பயன்பாடியின்றி முடங்கியுள்ளது. தினமும் சேகரமாகும் குப்பை கழிவு, ஆரணி ஆற்றில் கொட்டப்பட்டு பாழ்படுத்தி வருவது, சமூக ஆர்வலர்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில், 27 வார்டுகளில் உள்ள, 10,027 குடியிருப்புகள், 1,721 வணிக நிறுவனங்கள், 14 திருமண மண்டங்கள், மூன்று சினிமா திரையரங்குகள் வாயிலாக, தினமும், 10,000 -- 11,000 கிலோ குப்பை கழிவு வெளியேற்றப்படுகிறது.
நகராட்சி துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பை கழிவு, பொன்னேரி திருவாயற்பாடியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கிற்கு கொண்டு சென்று தரம் பிரிக்கப்படுகின்றன.
இதில், மட்கும் குப்பையை கொண்டு இயற்கை மற்றும் மண்புழு உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட மட்காதவை தனியாக பிரித்து எடுக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.
நகராட்சி நிர்வாகத்தால் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து சேகரிக்கப்படுவதில், 4.000 - 6,000 கிலோ வரை மட்டுமே திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
மற்றவை, பொன்னேரி ஆரணி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் கொட்டி குவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, பொன்னேரி பேருந்து பணிமனை எதிரே உள்ள ஆற்று பகுதியில், ஐந்து ஏக்கர் பரப்பில், பல ஆண்டுகளாக மலைபோல் கழிவு குவிந்து கிடக்கிறது.
இவற்றை, 'பயோ மைனிங்' முறையில் பிரிக்க, துாய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ், 1.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.
தனியார் நிறுவனத்தின் வாயிலாக ‛பயோ மைனிங்' முறையில் கழிவை அகற்றுவதற்காக ரோலர், கன்வேயர், இரும்பு சல்லடைகள் உதவியுடன் மண், கல், பிளாஸ்டிக் என தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மேற்கண்ட திட்டம், தற்போது செயல்பாடு இன்றி முடங்கி கிடக்கிறது. இதனால் ஆரணி ஆற்றை குப்பை கழிவில் இருந்து மீட்டெடுக்கும் பணிகள் தொய்வு அடைந்து உள்ளன.
மேற்கண்ட, 'பயோ மைனிங்' திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியில் தற்போது தினமும் நகராட்சியின் குப்பை கழிவு, தரம் பிரிக்கப்படாமல் வாகனங்களில் கொட்டப்படுவதும் தொடர்கிறது.
நகராட்சியின் குப்பை கழிவால், ஆரணி ஆறு பாழாகி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஆரணி ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள், நீர்வரத்து இருக்கும்போது அவை தண்ணீருடன் அடித்து செல்லப்பட்டு பல்வேறு கிராமங்களில் குவிகின்றன.
ஆற்றின் வளத்தை மீட்டெடுக்கவே, பயோ மைனிங் திட்டம் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்த நிலையில், தற்போது அதே பகுதியில் மீண்டும் கழிவை தொடர்ந்து கொட்டி குவித்து வருவது வேதனையானது. கண்துடைப்பிற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். மொத்த கழிவையும் தரம்பிரித்து கையாள்வதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பொதுமக்கள், வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆரணி ஆற்றில் தண்ணீர் தேங்கியதால் 'பயோமைனிங்' திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. கழிவு ஈரப்பதத்துடன் இருந்தால், அவற்றை பிரிப்பது சிரமம். தற்போது மீண்டும் திட்டப் பணிகள் துவங்கப்பட உள்ளது. அதேபோன்று ஆற்றில் குப்பை கழிவு கொட்டப்படுவதும் தவிர்க்கப்பட்டு, முழுமையாக பிரித்து கையாள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.