/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி நகராட்சி கழிவுகளால் பாழாகும் ஆரணி ஆறு
/
பொன்னேரி நகராட்சி கழிவுகளால் பாழாகும் ஆரணி ஆறு
ADDED : அக் 26, 2024 01:45 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சியில் தினமும் 11,000 கிலோ குப்பை கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.
நகராட்சி துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் பொன்னேரி திருவாயற்பாடியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் கொட்டி தரம் பிரிக்கப்படுகின்றன.
இதில் மட்கும் குப்பையில் இருந்து இயற்கை மற்றும் மண்புழு உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. மட்காதவை தனியாக பிரித்து எடுக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், மேற்கண்ட கழிவுகளின் ஒரு பகுதி, ஆரணி ஆற்று கரையோரங்களில் கொட்டி குவிக்கப்படுகிறது. ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும்போது இவை ஆற்றுநீருடன் அடித்து செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கலந்துவிடுகிறது.
தற்போதும் அதே நிலைதான் உள்ளது. கள்ளுக்கடைமேடு ஆற்று கரையோரங்களில் பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
இவை ஆரணி ஆற்றில் கலந்து அதில் தேங்கியுள்ள தண்ணீரை மாசுபடுத்தி வருகின்றன. குப்பை கழிவுகளால் ஆரணி ஆறு பாழாகி வருகிறது.
நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை முழுமையாக பிரித்து கையாள வேண்டும் எனவும், ஆற்று கரைகளில் கொட்டுவதை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.