/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரைபுரண்டோடும் ஆரணி ஆறு...எச்சரிக்கை!:54 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்; அசம்பாவிதம் தவிர்க்க தீவிர கண்காணிப்பு
/
கரைபுரண்டோடும் ஆரணி ஆறு...எச்சரிக்கை!:54 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்; அசம்பாவிதம் தவிர்க்க தீவிர கண்காணிப்பு
கரைபுரண்டோடும் ஆரணி ஆறு...எச்சரிக்கை!:54 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்; அசம்பாவிதம் தவிர்க்க தீவிர கண்காணிப்பு
கரைபுரண்டோடும் ஆரணி ஆறு...எச்சரிக்கை!:54 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்; அசம்பாவிதம் தவிர்க்க தீவிர கண்காணிப்பு
ADDED : டிச 02, 2024 03:04 AM

ஆந்திர மாநிலம் பீச்சாட்டூரில் உள்ள ஆரணி ஆறு நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு, 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், ஆரணி ஆற்றங்கரையோரத்தில் உள்ள, 54 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, போலீசார், வருவாய், உள்ளாட்சி மற்றும் நீர்வளத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் துவங்கி, நாகலாபுரம், பீச்சாட்டூர், தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை , பெரியபாளையம், ஆரணி வழியாக செல்லும், 108 கி.மீ., துார ஆரணி ஆறு, பழவேற்காடு ஏரியில் கலந்து வங்க கடலை சென்றடைகிறது.
இடையில் ஆந்திர மாநிலம் பீச்சாட்டூரில், 1.85 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட ஆரணி ஆறு நீர்தேக்கம் அமைந்துள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக மேற்கண்ட தமிழக ஆந்திர பகுதிகளில் கனமழை பெய்தது.
பீச்சாட்டூர், ஆரணி ஆறு நீர்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று காலை, 10:00 மணிக்கு, நீர்த்தேக்கதில் உள்ள மூன்று மதகுகளில், ஒரு மதகு திறக்கப்பட்டு, வினாடிக்கு, 500 கன அடி தண்ணீர் வெளியேற்ப்பட்டு வருகிறது. நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் என ஆந்திர மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று காலை வரை, தமிழக பகுதி ஆரணி ஆற்றில் உள்ள ஏ.என்.குப்பம், லட்சுமிபுரம் அணைக்கட்டுகள் மற்றும் ரெட்டிபாளையம் தடுப்பணைகள் நிரம்பி, சாரசரியாக வினாடிக்கு, 3,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், பீச்சாட்டூர் ஆரணி ஆறு நீர்தேக்கத்தில், இருந்து வெளியேற்றப்படும், தண்ணீரும் சேரும் பட்சத்தில், ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலை ஏற்படும்.
இதையடுத்து, நேற்று காலை, தமிழக நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழக ஆரணி கரையோரம் உள்ள ஊத்துக்கோட்டை, தாராட்சி, பேரண்டூர், பேரிட்டிவாக்கம், மங்களம், காரணி, புதுவாயல், ஏலியம்பேடு, லட்சுமிபுரம், காட்டூர், ஆண்டார்மடம் உள்ளிட்ட, 54 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை இருப்பதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பகுதியில் ஆரணி ஆறு கடக்கும் பகுதி முழுதும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்டது என்பதால், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருவாய் துறை மற்றும் உள்ளாட்சி துறை சார்பில், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் நடவடக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரணி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, ஆற்றில் குளிப்பது, மீன் பிடிப்பது போன்ற சம்பவங்களால் உயிரிழப்புகள் ஏற்பட கூடும். அதை தடுக்கும் நோக்கில், ஆரணி ஆற்றில், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, கவரைப்பேட்டை, பொன்னேரி, திருப்பாலைவனம், காட்டூர் ஆகிய போலீஸ் நிலையம் சார்பில் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட ஆரணி ஆற்றில், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஆரணி ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டால், உடனடியாக மணல் மூட்டைகளை வைத்து அடைத்து கரையோர பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்க நீர்வளத்துறையினர் தயார் நிலையில் கண்காணித்து வருகின்றனர். அதற்காக, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில், 10,000 மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள ஆண்டார்மடம் தடுப்பணை நிரம்பி உபரிநீர், பழவேற்காடு ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அங்குள்ள தரைப்பாலம் மூழ்கும் அபாயம் உள்ளது.
இதனால் காட்டூர் - பழவேற்காடு இடையேயான போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்படும்.
போலாச்சியம்மன்குளம் கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலை பாலத்தை தொட்டப்படி ஆரணி ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பாலத்தில் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நீர்வளத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‛பீச்சாட்டூர் அணையில் இருந்து காலையில் திறக்கப்பட்ட தண்ணீர், மாலை அல்லது இரவில் தமிழக பகுதியை வந்தடையும். அதனால், 24 மணி நேரமும், தமிழக ஆரணி ஆற்றங்கரையோர பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வருவாய் துறை, உள்ளாட்சி துறையினர் வாயிலாக கரையோர கிராம மக்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி வருகிறோம்' என்றார்.
- நமது நிருபர்குழு-