/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம் விமரிசை
/
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம் விமரிசை
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம் விமரிசை
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம் விமரிசை
ADDED : ஜன 12, 2025 08:47 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று இரவு முதல், இன்று அதிகாலை வரை நடந்த ஆருத்ரா அபிஷேகத்தில், 33 பழ வகையான அபிஷேகங்கள் நடராஜ பெருமானுக்கு நடத்தப்பட்டது. இதில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவில், சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதல் சபை என்பதால், ரத்தினசபை என்றழைக்கப்படுகிறது.
மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதையே, ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று இரவு, திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆருத்ரா அபிஷேக விழா நடந்தது.
தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு, ரத்தின சபாபதிப் பெருமான், கோவில் வளாகம் பின்புறத்தில் உள்ள ஸ்தல விருட்சத்தின் கீழ், ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில், நேற்று, இரவு 9:30 மணிக்கு, விபூதி அபிஷேகத்துடன், ஆருத்ரா அபிஷேக விழா துவங்கியது.
பின்னர், நடராஜருக்கு, கதம்ப பொடி, நெல்லிப் பொடி, வில்வப் பொடி, சாத்துக்குடிவாழை, பஞ்சாமிர்தம், பால், தேன், சொர்ணாபிஷேகம், கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி என, மொத்தம், 33 வகையான அபிஷேகங்கள், இன்று, அதிகாலை 3:30 மணி வரை, நடத்தப்பட்டது. காலை 5:00 மணிக்கு, நடராஜ பெருமான் ஆலமர பிரகாரத்தை வலம் வந்து, கோபுர தரிசனத்திற்கு வந்த பின்திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின், நடராஜ பெருமானுக்கு வெள்ளைசாத்துபடி நடந்தது. தொடர்ந்து, நடராஜ பெருமான் மற்றும் அம்பாள் கொடி மரத்தை, ஒன்பதுமுறை வலம் வந்து, வெள்ளை சாத்துபடி கலைத்து நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
காலை 9:00 மணிக்கு நடராஜ பெருமான், சிறப்பு அலங்காரத்தில் பழையனுார், திருவாலங்காடு உள்ளிட்ட கிராமங்களின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இன்று, பிற்பகல், 1:00 மணியளவில் அனுக்க தரிசனம் நடைபெற உள்ளது. ஆருத்ரா அபிஷேகத்தை பக்தர்கள், காணும் வகையில், கோவில் வளாகத்தில் 5 இடங்களில் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. பல்வேறு குழுவினரால் பரத நாட்டியம் நடத்தப்பட்டது. மேலும் சிவபக்தர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் செய்து இருந்தனர். திருத்தணி, டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆருத்ரா அபிஷேகத்தில் பங்கேற்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.