/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடம் ஒதுக்குவது குறித்து வியாபாரிகளிடம் கருத்து கேட்பு
/
இடம் ஒதுக்குவது குறித்து வியாபாரிகளிடம் கருத்து கேட்பு
இடம் ஒதுக்குவது குறித்து வியாபாரிகளிடம் கருத்து கேட்பு
இடம் ஒதுக்குவது குறித்து வியாபாரிகளிடம் கருத்து கேட்பு
ADDED : மே 03, 2025 11:22 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை, கடந்தாண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி, மாநில நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.
வாழ்வாதாரம் இழந்த 150க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், நிரந்தர இடம் கேட்டு கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜனிடம் முறையிட்டனர்.
அதன்படி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பேருந்து நிலையம் அருகே, 40 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் தரை மற்றும் மேற்கூரை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது.
அந்த இடத்தில், 6 அடிக்கு 5 அடி அளவில், 180 கடைகள், 8 அடிக்கு 6 அடி அளவில், 17 கடைகள் என, மொத்தம் 197 கடைகளுக்கான இடம் ஒதுக்கப்பட உள்ளன. இதை தொடர்ந்து, கலெக்டர் உத்தரவின்படி, கடைகள் ஒதுக்குவது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம், நேற்று நடந்தது.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், தாசில்தார் சுரேஷ்பாபு, டி.எஸ்.பி., ஜெய்ஸ்ரீ, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒதுக்கிய இடத்தில், ஒவ்வொரு கடைகளுக்கு இடையே தடுப்புச்சுவர், கடைகளுக்கு மேடை, கடையின் அளவை 6 அடிக்கு 10 அடியாக விரிவுப்படுத்த வேண்டும் என, சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இறுதியில் பேருந்து நிலைய வளாகத்தில், சாலையோர கடைகளுக்கு இடம் ஒதுக்க எவ்வித ஆட்சேபனையும் இன்றி அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு, கருத்து கேட்பு தீர்மானத்தில் கையெழுத்திட்டனர்.

