/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழில் பிரச்னையில் ஆடிட்டர் தற்கொலை
/
தொழில் பிரச்னையில் ஆடிட்டர் தற்கொலை
ADDED : அக் 26, 2024 01:44 AM

திருவள்ளூர்:திருவள்ளுர் அடுத்த காக்களுர் பகுதியைச் சேர்ந்தவர் குமரகுரு, 33. ஆடிட்டரான இவர் காக்களூரில் ஏ.கே.டெக்ஸ் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஆடிட்டிங் தொழில் செய்து வந்தார்.
இவரிடம் கடம்பத்துார் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் தன் மனைவி சுலோச்சனா பெயரில் உள்ள நிறுவனத்திற்கு 2022 ஆண்டு ஜி.எஸ்.டி., கட்ட அணுகியுள்ளார். தற்போது அந்த நிறுவனத்திற்கு 27 லட்ச ரூபாய் ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகை கட்ட வேண்டும் என, நோட்டீஸ் வந்துள்ளது.
இதுகுறித்து ஏற்பட்ட தகராறில் ஜி.எஸ்.டி., நிலுவைத்தொகையை 27 லட்சம் ரூபாயை ஆடிட்டர் குமரகுரு சரிசெய்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் சுலோச்சனா பெயரில் உள்ள கம்பெனி ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை மேலும் 5 லட்சம் கட்ட வேண்டும் என நோட்டீஸ் வந்தது.
இதனால் மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆடிட்டர் குமரகுரு தன்னுடன் சேர்த்து 430 பேரிடம் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிரேம்குமார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் கடந்த 21ம் தேதி புகார் கொடுத்தார்.
இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து நேற்று முன்தினம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்க வழக்கறிஞருடன் வந்த ஆடிட்டர் குமரகுருவை அங்கு வந்த பிரேம்குமார் 'என் மீதே புகார் கொடுக்க வந்திருக்கிறாயா' என கூறி கொலை மிரட்டல் விடுத்து 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.பி., அலுவலகத்தில் ஆடிட்டர் குமரகுரு புகார் அளித்தார்.
இந்நிலையில் ஆடிட்டர் குமரகுரு அன்று இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் தாலுகா போலீசார் குமரகுருவின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குமரகுரு தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக குமரகுரு எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த அவரது காரில் 2.50 லட்சம் ரூபாய், லேப்டாப்பை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.